அதிகாரம் பற்றிய சிதைவின் குரல்கள்..

Crucifixion Pablo Picasso

அதிகாரம் பற்றி நண்பர் பைத்தியக்காரன் எழுதிய இந்த பின்னோட்டம் பிறரின் கவனத்தைப் பெறும் பொருட்டு இங்கு தனிப்பதிவாக வெளியிடப்படுகிறது. கொல்லையில் பேசியதை தெருவில் கூவுவதைப்போல என்று வைத்துக் கொள்ளுங்களேன். நண்பர் சுந்தரின் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கும்  காமக்கதைகள்-45 ல் கதை எண்-6 க்கு இடப்பட்டதே இந்த பின்னோட்டம்.  புபுட்டியான் என்பவரின் கெள்விக்கான பதிலாக எழுதப்பட்டது இது. அதிகாரம் குறித்த முழுமையான விடயங்கள் இதில் பேசப்படவில்லை என்றாலும் அறிமுகமாக சிலவற்றை இங்கு குவிமையப்படுத்துகிறது என்பதாலும்  உடலரசியல் பற்றிய தொகுப்பாக இப்பதிவு இருப்பதாலும் இங்கு தொகுக்கப்படுகிறது.

-------------------------------------------------------------------------------------------

அதிகாரம் என எதை சொல்கிறீர்கள் என கேட்டிருக்கிறீர்கள். நான் புரிந்து கொண்டதை இங்கு பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். இது முற்று முழுதான இறுதி முடிவல்ல. எனது புரிதலின் போதாமையும் கலந்தது.

நண்பா, அதிகாரம் என்பது ஒரு பொருளல்ல, அது யாருக்கும் உரியதும் அல்ல. அதிகாரம் என்பது சீருடையில், ஒரு சொல்லில், ஒரு பொருளில், ஏன் ஒரு பார்வையில்... என பல தளங்களில் விரிகிறது. போலீசாரின் சீருடையை பார்த்ததும் வரும் பயத்தை ஒரு உதாரணமாக கொண்டால், அதிகாரம் சீருடையில் இருப்பது புரியும். சாதாரண லத்தியை பார்த்ததும் ஏற்படும் பயம் கூட அதிகாரத்தின் விளைவை விளக்குவதுதான். ராமாயணத்தில் ராமரின் காலணிகளை சிம்மாசனத்தில் வைத்து பரதன் ஆட்சி செய்ததாக வருவதை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

ஆக, அதிகாரம் பல துறைகளில், நிறுவனங்களில், குழுக்களில், சார்பான உறவுகளில் இயங்கி கொண்டிருக்கிறது. ஒரு நுனியிலிருந்து இன்னொரு நுனிக்கு வழிந்து கொண்டிருக்கிறது. அதாவது இடம் மாறிக் கொண்டிருக்கிறது. உதாரணத்துக்கு மன்னராட்சியில் அதிகாரம் மன்னர்களிடம் இருந்தது. அதுவே மன்னராட்சி முடிவுக்கு வந்ததும் அதிகாரம் வழிந்தோடி வேறொரு இடத்துக்கு சென்றது. நேபாளத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். சில மாதங்களுக்கு முன் நேபாளத்தை ஆண்ட மன்னனின் ஒவ்வொரு சொல்லும் அதிகாரமாக இருந்தது. இன்று?

ஆக ஒற்றைத்தன்மை கொண்டதாக ஆதியில் இருந்த அதிகாரம், இன்று பன்மை தன்மை கொண்டதாக மாறியிருக்கிறது. அதுவும் முக்கியமாக தொழில்நுட்பம் வாய்ந்ததாக இருக்கிறது. சட்டமாக இயங்காமல் சகஜமாக இயங்குவதில் வெற்றி பெற்றிருக்கிறது. தண்டனையை தீர்வாக்காமல் கட்டுப்பாட்டை முன்வைக்கிறது. சரி - தவறு, நல்லது - கெட்டது ஆகியவை இன்று நுட்பமான குறிகளின் வழியே உணர்த்தப்படுகிறது.

அதாவது உடம்பில் வசிப்பவர்கள் மனிதர்கள் என்று பார்க்காமல், உடல்களாக மனிதர்களை பார்ப்பதுதான் அதிகாரம். அரசாலும், அரசு சார்ந்த நிறுவனங்களாலும் உடல்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்தக் கட்டுப்படுத்தல் சிறைச்சாலைகளில் மட்டுமே இல்லை. பள்ளி, கல்லூரி, வேலை பார்க்கும் இடம், குடும்பம், சாலை, திரையரங்கம், காவல்துறை, ராணுவம், செய்தித்தாள்கள், இதழ்கள்... என சகல இடங்களிலும் இருக்கிறது, இயங்கிவருகிறது.

அந்தவகையில்தான் காமமும், அதிகாரத்தின் பிடியில் இருக்கிறது என்கிறேன். பாலியல் சார்ந்த கட்டுப்பாடுகளை சமூகம் விதிக்கும்போதே வடிகால்களையும் அனுமதிக்கிறது. ரகசியமாக பேசவும், பார்க்கவும் அனுமதிக்கப்படும் எந்த பொருளும், விஷயமும் அதிகாரத்தின் கட்டுப்பாட்டில் தீவிரமாக இயங்குகின்றன என்பதுதானே பொருள்?

சரி, பாலியல் அறிவியல் என்பது என்ன? பாலியல் குறித்து வரையறை செய்வது, கலாசார அடிப்படையில் காமத்தை கட்டமைப்பது... இதுதானே? மரபார்ந்த அறிவியல் பாலியலை மறு உற்பத்திக்கான சாதனமாகவும், பாலியல் சார்ந்த நோய்களுக்கான மருத்துவமாகவும்தானே பார்க்கிறது? இனப்பெருக்கத்துக்காக மட்டுமா பாலியல்? இனப்பெருக்கத்தின் மூலம் இந்த சமூகம் தங்கு தடையின்றி இயங்குவதற்கான உடலை உற்பத்தி செய்கிறோம் என்பது தவிர இனப்பெருக்கத்தின் பங்கு என்ன? குழந்தைகளை பெற்றெடுக்கவா காமம்?

பாலியல் குறித்து சமூகம் கட்டமைத்திருக்கும் உண்மைக்கும், உடலியல் சார்ந்த பாலியல் உண்மைக்கும் வேறுபாடு இருக்கிறது. உடலுக்கான காமம் அனுமதிக்கப்படுவதில்லை. ‘சமூகம்' சொல்லும் காமத்தை மட்டுமே அனுபவிக்க நிர்பந்திக்கப்படுகிறோம்.

இந்த இடத்தில் பாலியல் கட்டமைக்கும் உடல் ஆதிபத்தியம் முக்கியமானது. காரணம், இந்த உடல் ஆதிபத்தியம்தான் இன்றைய நவீன அதிகாரத்தின் எல்லா வடிவங்களிலும் ஊடுருவி இருக்கிறது. அது பாலியல் சார்ந்து மட்டுமல்ல, உடலியலின் சகஜ நிலை என்ன என்பதையும் வரையறுக்கிறது. இந்த ஆதிபத்தியம் எல்லா இடங்களிலும் இருக்கிறது. தனிப்பட்ட குடும்ப அமைப்பினுள் நேரடியாக தலையிடாதபோதும், அந்த சமூக அமைப்பின் அதிகார வடிவத்துடன் ஊடாடும்போது குடும்பமும் அதிகாரத்தின் நுண் அலகாக மாறுகிறது.

சமூகம் அனுமதித்திருக்கும் போர்னோகிராபிக்கும், அதிலிருந்து விலகிய போர்னோ இலக்கியத்துக்குமான வித்தியாசத்தை உணர சொல்வது இதனால்தான்.

நண்பா, மீண்டும் சொல்கிறேன்... இது இறுதியான முடிவோ, விளக்கமோ இல்லை. எனது போதாமையும் இதில் கலந்திருக்கிறது.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

இக்கருத்துக்களின் தொடர்ச்சியாக பைத்தியக்காரனின் இப்பதிவையும் காம அரசியல், காமத்தின் அரசியல், காமமே அரசியல் வாசியுங்கள். காமத்தின் அரசியலை தமிழ் சூழலில் விளக்கும் முயற்சியாக எழுதப்பட்டுள்ளது.

image curtsey:   "Crucifixion" - Pablo Picasso