ஈ: நாம் கம்யூனிஸத்தை தொட்டதால் இதைக் கூறுகிறேன், பொதுவுடமைக் கோட்பாட்டின் மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனங்களில் இரண்டை இவ்வுரையாடலுடன் தொடர்புடைய விதத்தில் கவனத்தில் கொள்வது நல்லது. அவை 1. உளவியல் பற்றிய ஆய்வின்மை 2. பாலியல் பற்றிய வரையறையும் கருத்தாக்கங்களும் இல்லாமல் இருப்பது. நமக்குத் தெரிந்து மார்க்சீயம் கூறும் 'உற்பத்திச் சக்தி' என்பதும், 'உபரி உழைப்பு' 'மறு உற்பத்திக் கோட்பாடு' மற்றும் 'அந்நியமாதல்' ஆகியவை பெண்ணிய கண்னோட்டத்தில் வளாத்ததெடுக்கப்படவில்லை என்று கூறலாம்.
அதாவது பெண் என்பவள் தொழிலாளியாக அதாவது உற்பத்தி சக்தியாக பொதுவான பொருளியல் சுரண்டலுக்கு ஆளாகும் அதே நேரத்தில் கணவன் அல்லது குறிப்பாக ஆணாதிக்கத்தின் பாலியல் வேறுபாட்டின் அடிப்படையிலான பாலியல் சுரண்டலுக்கும் ஆளாகிறாள். ஒரு ஆணுடலின் உழைப்புச் சக்தியை மறுஉற்பத்தி செய்யும் அவளது உழைப்பும் அதற்கான உபரி மதிப்பும் அளவிடப்படுவதில்லை. இருப்பினும் ஏங்கல்ஸின் குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றத்தில் அவர் முன் வைக்கும் முதல் வர்ககப் பகைமை என்பது ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையிலேயே தோன்றியது என்றும் ஒருதாரமணமுறை வரலாற்றில் ஒரு முன்னோக்கிய பாய்ச்சலாக இருந்தாலும் அது தனிச்சொத்துடன் இன்றுவரை இணைந்தே இருப்பதை விளக்கியுள்ளார்.
ஆக பெண்ணடிமைத்தனம் என்பது ஒருவனுக்கு ஒருத்தி என்கிற ஒருதாரமணமுறையுடன் கட்டுண்டிருக்கிறது. இதன்பொருள் பலதாரமணமுறை என்பது ஒரு மாற்று என்பதல்ல. பெண்களை இவர்கள் பொதுவுடமை ஆக்குகிறார்கள் என்கிற கேள்வி மார்க்ஸ் ஏங்கல்ஸ் நோக்கி எழுப்பப் பட்டபோது அதற்கு தனது 'கம்யூணிஸ்ட் கட்சி அறிக்கையில்' ஒரு நட்பமான பதில அவர்களால் முன்வைக்கப்படுகிறது. அதாவது, முதலளித்துவ வாதிகள் இந்த கேள்வியை எழுப்புவதற்கு காரணம் நாம் தனிச்சொத்தைதான் பொதுவுடமை ஆக்குவதாகக் கூறினோம், இவர்கள் பெண்களை தனிச்சொத்தாக கருதுவதால்தான் இந்த கேள்வி ஏழும்புகிறது என்றார்கள். ஆக, பெண் என்பவள் ஒர உயிர்ப்புள்ள ஜீவி என்பதும் அவள் சொத்தாக பாவிக்கப்படும் முதலளித்தவ உளவியலையும் நுடபமாக அம்பலப்படத்தினார்கள். இதிலிருந்து நாம் பெறுவது ஒருதாரமணமுறையை நிராகரிப்பதோ அல்லது பாலியலை விடுவிப்பதோ சமூகத்தினை சிதைத்தவிடும் என்பது ஒருவகை கற்பிதமே என்பதை உணரலாம். இதன் பின் உள்ள உளவியல் ஆண்கள் மற்றும் பெண்கள் எல்லோரும் அடக்கிவைக்கப்பட்ட மிருக உணர்ச்சி உள்ளவர்கள் என்பதும், அதனால் அது சமூகத்தை சீரழித்தவிடும் என்பதும் ஆன ஒருவகை பாலியல் ஒடுக்க உணர்ச்சி பற்றிய மிகைச்சொல்லாடலே ஆகும். இதற்கு பிராய்டியம் முன்வைத்த பாலின்ப ஆற்றல் பற்றிய கருதுகோள்கள் பேரளவில் துணை புரிந்துள்ளன எனலாம். பிராய்டியம் பாலியல் பற்றிய ஒரு decoding machine ஆக செயல்பட்டள்ளது என்றால் மிகையாகாது. இதனை வேறொரு உரையாடலுக்க நகர்த்திவிட்டு தொடர்வோம்.
இ: அப்படியெனில், ஒருதாரமணமுறை என்பது ஒடுக்கு முறையின் ஒரு வடிவம் என்கிறீர்களா?
ஈ: ஆம். தாய்வழிச்சமூகத்தினை தனிச்சொத்துரிமை தந்தைவழிச் சமூகமாக்கியதில் துவங்கியது பெண் அடிமைத்தனம் என்கிறார் ஏங்கல்ஸ். இவை வளாத்தெடுக்கப்படவேண்டிய பார்வைகளாகும். திருமணம் என்பது ஒரு அங்கீகரிக்கப்பட்ட விபச்சாரம் போன்றதே. அதாவது ஆண் பெண்ணின் விபச்சாரம் என்பது நன்னெடுத்தை ஒழுக்கத்தின் வழியாக ஒழுங்கமைக்கப்படுகிறது திருமணத்தில் என்கிறார் ஏஙகல்ஸ் ஆக குடும்பம் என்பது குறித்த மார்க்சியப் பார்வைகள் முக்கியத்துவம் வாய்ந்த கருத்தாக்கங்கள் ஆகும். உளவியல், பாலியல், பெண்ணியம் போன்ற துறைகளின் ஆய்வும் மார்க்சியத்தின் முன் உள்ள மற்றும் மார்க்சியர்கள் ஆராய வேண்டிய முக்கியப் பிரச்சனைகளாகும். நமது உரையாடல் அறிந்தோ அறியாமலோ அதனை ஒட்டி வந்துள்ளது வரவேற்கத்தக்கதே.
அ: இவ்வுரையாடல் பலகோணங்களில் கேள்விகளை எழுப்பி நிற்பதாகவே கருதுகிறேன். இறுதியாக நீலப்படங்கள் பலவித பாலியல் முறைகளில் செலுத்தும் கவனம் பற்றி சிலவற்றைக் கூறுவது உரையாடல் முழுமைக்கு உதவலாம். ஒப்பீட்டளவில் தன்பால் புணாச்சி மட்டுமல்லாது பலவித மாற்றுப் பாலியல் புணர்ச்சிப் பற்றிய படங்களும் அதிகமாக வருவதில்லை. அவை சராசரியான படங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட குறைவே. குறி்ப்பாக நீலப்படம் என்பது பெண் உடல் புனைவாக்க இன்பத்தினையே மையமானதாக கொண்டு உள்ளது. அல்லது அது ஆணிய பார்வையின்பம் (male gaze) என்பதையே தனது கட்டமைப்பிற்கான விதியாக கொண்டுள்ளது எனலாம். மிருகங்களுடன் ஆண்/பெண் இருவரும் புணர்வது போன்ற படங்கள் ஒருவித பாலியல் அதீதம் பற்றிய வன்முறை சார்ந்த சொல்லாடல்களை கட்டமைப்பதாக உள்ளன. இவற்றிற்கு பார்வையாளரிடையே ஒரு கவர்ச்சியும் இருப்பது ஆழ்ந்த உளவியல் சிக்கல் சார்ந்த ஒரு ஆய்வுப் புள்ளியாகும். பாலியலை ஒடுக்கவது மனிதனை மூர்க்கமுள்ளவனாக மாற்றுகிறது, இதன் நீட்சி பாலியல் விடுதலை மட்டுமே மனிதனை மலர்ச்சியள்ளவானாக மாற்றும் என்பதல்ல, பாலியலின் அரசியலை புரிந்துகொள்தலே முக்கியம் என்பதையும் கவனத்தில் கொள்வது நல்லது. taboo எனப்படும் விலக்கப்பட்ட பாலியல் பற்றிய படங்கள் ஒரு சீரியலாகவே பல பகுதிகளாக தயாரித்து அளிக்கப்படுகின்றன. தாய்-மகன் தந்தை-மகள் சகோதரன்-சகோதரி மற்றும் உறவினர்களான மூத்தவர்களுடன்ஆன உறவு என இவை தற்போதைய குடும்ப உறவுகளின் உள்ளார்ந்த தளத்தில் ஒருவித விரிசலினை அல்லது குறைந்தபட்சம் அதற்கான சிந்தனை சாத்தியத்தினை அல்லது புனைவை கட்டமைக்கின்றன. பாலியல் என்பது இயற்கை சார்ந்ததா? அல்லது கலாச்சாரக் கட்டமைப்பா? என்கிற கேள்வியை எழுப்பகின்றன. இவற்றுடன் சாடிஸம் எனப்படும் எதிர்பால்வதையின்பம் மஸோக்கிஸம் எனப்படும் சுயவதைபாலின்பம், சாடோ மஸோக்கிஸம் எனப்படும் இருபால்வதையின்பம் ஆகியன பற்றிய படங்களும் வெளிவந்துள்ளன. shemale எனப்படும் transsexual-கள் பற்றிய படங்களும், வயதானவர்களின் பாலியல், சிறார் சிறுமிகளினை பயன்படுத்தி பாலிண்பம் பற்றிப் பேசும் படங்கள் என அதன் வீச்சும் பரப்பும் பல தளங்களிலானதாக உள்ளது. இவ்வகைப்படங்களின் பாலின்பத்திற்கு பின்னால் ஊடாடும் அதீத உடலின்பம் பற்றிய கருத்தாடல் என்பது மற்றொரு அலசலுக்கானது. அதிலும், இவ்வகை பாலின்பங்கள் நமது பண்பாடு இறுகிய சமூகங்களில் மிகக்குறைவாகவே காணப்படுகிறது. இந்திய ஆதிக்க மற்றும் மதம்சார்ந்த தத்துவங்கள் உடலை இரண்டாம் பட்சமாகவும் ஆன்மாவை முதலாகவும் கருதும் போக்கில் இத்தகைய படங்கள் உடலை முதன்மைப்படுத்திய ஒரு உரையாடலை முன்வைக்கின்றன.
ஆ: மர்க்கி தி சேத்தின் பாலியல் முயற்சிகள்கூட உடலை முதன்மைப்படத்தி கிறித்துவ மதங்களின் மற்றும் மடாலயங்களின் ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு குரலாகவே பார்க்கலாம். குற்றமும் பாலியல் மீறல்களும் மனித இயல்பு என்றும் இன்றைய புணித மற்றும் அற மதிப்பீடுகளே அவற்றை இயல்பற்றதாக ஆக்கியுள்ளன என்றும் அந்த இயல்பை நடைமுறைப் படுத்துவதற்கான உரிமையைக் கோரியும் முன்வைக்கப்பட்ட குரலே சாத்தின் குரல். மேற்கத்திய பாலியலின் விக்டோரியன் தூய்மைவாதத்தை கேள்விக்குட்படுத்தி பாலியல் பற்றிய திறந்த சொல்லாடல் களத்தை உருவாக்கியதில் சாத்தின் பங்கு முக்கியமனானதாகும். ஆக, மதங்களின் ஒழுங்கமைக்கபட்ட பாலியலுக்கும் அவை முன்வைக்கும் கலாச்சாரம் என்கிற பண்பாட்டிற்கும் எதிரான ஒரு குரல் இவற்றின் அடிநாதமாக உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஈ: நீலப்படங்களின் விமர்சனம் என்பது அதன் அடிப்படையில் இயங்கும் ஆதிக்க கண்ணோட்டம் அது கட்டமைக்கும் கதையாடல் அப்படங்கள் உருவாக்கும் பொறுத்தமற்ற அதீத பிம்ப உருவாக்கமும்தான். இவ்வுரையாடல் அப்படங்களை பார்க்கும் கண்களில் ஒரு விரிசலை ஏற்படுத்தினால் பயனுடையதாக இருக்கும். மேலும், பண்பாடு இறுகி மதச்சார்புடன் இயங்கும், மதத்தின் ஆதிக்கத்தில் உள்ள பல நாடுகள், மதத்தின் இறுகிப்போன புணிதக் கண்ணோட்டங்கள், நாகரிகம், பண்பாடு என்ற பெயரால் மனித உடல்மீது சுமத்தப்படும் பலவகை ஆதிக்கங்கள் ஆகியவற்றின்மீது ஒரு சிறிய கல்லெறிதலை செய்தாலும் கலகத்தின் ஒரு குரலாய் அதை நாம் அங்கீகரித்துதான் ஆகவேண்டும். அதேசமயம் இப்படங்களே கலகத்தன்மை கொண்டவைதான் என்பது மற்றொரு மையமான புனைவுதானே தவிர வேறொன்றுமில்லை. ஒருபுறம் பாலியல்பற்றிய திறந்த உரையாடல்களத்தை கட்டமைக்கும் இவைகள் பிறிதொரு தளத்தில் பாலியல் பற்றிய அதிகாரத்துவ சொல்லாடல்களை உற்பத்தி செய்பவையாகவும், இயங்கிக் கொண்டிருக்கும் நுகர்வு முதலாளியத்தின் பாலியல் பற்றிய புனைவுகளை அமைப்பாக்கம் செய்பவையாக உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
(முற்றும்)
15.05.1993 -ல் இது உரையாடல் வடிவில் எழுதப்பட்டது. அதன்பின் தற்பொழுது முதன்முறையாக தொடராக வெளியிடப்பட்டுள்ளது. இதில் எதுவும் புதிப்பிக்கப்படவில்லை, காரணம் நேரமின்மையால் மேலதிகமாக இதை ஒட்டிய ஆய்வுகளை முறைப்படுத்தி வாசிக்க இயலவில்லை. வழக்கமான சோம்பேறித்தனம். இதை ஒட்டி வந்த பின்னொட்ட உரையாடல்கள் இதனை தற்போதைய வளர்ச்சிக்கு ஏற்ப மறுவாசிப்பு செய்து புத்தாக்கம் செய்ய வேண்டிய தேவையை உணர்த்துகிறது. இன்றைய பாலியல் பற்றிய நீலப்படப்பனைவுகளின் தரமும் தன்மையும் பெரும் மாற்றத்திற்குள்ளாகி உள்ளன. இனி தொடர்ந்து வாய்ப்புள்ளபோது புதிய கருத்தாக்கங்கள் வளர்ச்சிகள் என இது மேலதிக அலசுலுக்கு உட்படுத்தப்பட்டு புதிதாக இத்துறைக் குறித்த உரையாடல்களை பதிவுகளில் தொடரும் எண்ணம் உள்ளது. தொடர்ந்து வாசித்தும் கருத்தும் சொன்ன பின்னோட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி. இதனை கையெழுத்துப் பிரதியாக வாசித்துவிட்டு, உடனடியாக பதிவில் வெளியிடுங்கள் என்று தொடர்ந்து வலியுறுத்திய நண்பர் முபாரக்கிற்கும் நன்றி. அவரது வலியுறுத்தல் இல்லை என்றால் இதனை வெளியிட்டிருப்பதற்கான வாய்ப்பு குறைவே.
-ஜமாலன் - 09-03-2008.
image: Michelangelo - Art.






