ராமர் எனும் நவீன தொண்மம்.

ராமர் மற்றும் ராமாயணம் இந்துத்வ சக்திகளால் எப்படி ஒரு தொண்ம வரலாறாக இந்திய மனங்களில் எழுதப்படுகிறது என்பதை விளக்கும் முகமாக எழுதப்பட்டஇக்கட்டுரை மொழியும் நிலமும் என்கிற நூலின் உடல் அரசியல் என்ற பகுதியில் இடம் பெற்றுள்ள குறிப்புரை-12 இங்கு மறபிரசுரம் செய்யப்படுகிறது.

குறிப்புரை 12 வரலாற்று உருவாக்க எந்திரம்

மொழி ஒரு கூட்டத்தின் பொது நினைவுகளை பெருக்குவதன் மூலம் வரலாற்றை உருவாக்கியும், மறத்தலின் மூலம் அழித்தும் எழுதுகிறது। வரலாறு என்பது நினைவுகளின் வாக்கியத் தொடர்ச்சிகளாக உற்பத்தி செய்யப்படுவதே. தொடர்ச்சியற்ற வாக்கியத் தொடர்களை தங்களது பேச்சாக கொண்டவர்களை, பழைய சமூகம் மந்திரவாதி, சித்தர் என்று குறிநிலைப்படுத்தி உள்ளது. இவர்கள் வரலாற்றிற்கு வெளியேயான அதன் ஒழுங்கமைப்பை அச்சுறுத்தும் நினைவுகளைக் கொண்டவர்கள்.

நினைவுருவாக்கம், வரலாற்றுக் கதைகளை பதியவைப்பதுடன், ஒவ்வொரு காலத்திற்கும், அதிகாரமானது வரலாற்று நினைவை தனது மறுகதையாடல் மூலம் புதிய குறி அமைப்புகளுக்குள் புகுத்தி, அன்றைக்கான உடல்களை அரைத்து கலக்கும் அரசியலை நிகழ்த்தி விடுகிறது. உனக்கு நம் சமூகத்தில் நடந்த அதிகார பெருமத வரலாற்று எந்திரத்தால் உடல்கள் அரைத்துக் கலக்கப்பட்ட ஒரு கதையைக் கூறுகிறேன் கேள்.

இந்திய வரலாறு ராமயணம் என்கிற வண்ணத் தொலைக்காட்சி தொடர்மூலம் மதநினைவுடன் மீள்-உருவாக்கம், செய்யப்பட்டதின் விளைவாக பாபர்-மசூதி இடிக்கப்பட்ட கதைதான் அது। ராமாயணம் என்கிற பெருங்கதையாடல் அரசுத் தொலைக்காட்சியின் மூலம் 'primetime'–ல் பரவலாக்கப்படுகிறது. இந்த ராமாயணத்தைப் பார்க்கச் செய்வதற்காக பல பத்திரிக்கைகள் உருவாக்கிய கதையாடல்கள் ஏராளம். இதற்காக அறுவை சிகிச்சைகள்கூட மாற்றிவைக்கப்பட்டன. ஒளி பரப்பப்படும், அந்த குறிப்பிட்ட நேரம் நாடே உறைந்து போன ஒரு அமைதி–போர்த் தயாரிப்புகளில் நிலவுவதைப் போன்று. ராமயணத் தொடர் முடிந்த பிறகு, அதன் கதாபாத்திரங்கள், சமகால அரசியலுக்குள் வருகிறார்கள் தேர்தல் வேட்பாளர்களாக. பின், நாடெங்கும் 'கரசேவை'-க்கான கல் சேகரிப்பு இயக்கம். 'பாரத வரலாறு' மக்களிடம் பரவலாக்கப்பட்டு, கல்லின் வழியாக பகிர்ந்து கொள்ளப்படுகிறது. சாதரண 'கல்' ஒரு வலிமையான குறியீடாகி, ராமர் கோவில் கட்டப்படும் 'தேசியப் பணியில்' மக்கள் அனைவரும் பங்குபெறவும், அதற்கான பொறுப்பை ஏற்கவும் மக்களது மனநிலையை தயார் செய்ய முயன்றது. இக் 'கற்கள்' ஒவ்வொரு குடிமகனையும், பாரத வரலாற்றின்(1) கட்டிடக் கற்களாக, வரலாற்றுத் தன்னிலைகளாக மாற்றியது। இவ் ஊர்வலம் மூலம், தேசிய எல்லைப்பரப்பையும், ஒரு சுற்றுவட்டம் இடப்பட்டு, பல்வேறு இன, மொழி, சிறு கலாச்சார அடையாளங்கள் 'பாரத வாசி' என்கிற ஒற்றை குறிக்குள் சுருக்கப்படுகிறது. இதன் இன்னொரு பலன் வலிமையாக ஆளப்படுவதற்கான தயாரிப்பு மக்களின் மனப்பரப்பிற்குள் கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறாக 'நவீன-ராமாயணத்திற்கான' அல்லது, வரலாற்றின் 'திரும்பவரலுக்கான' அரங்கம் உருவாக்கப்பட்டது.





  • (1) 'இந்திய வரலாறு' என்பது ஆங்கிலேயக் காலணி நினைகவுகளையும், 'பாரத வரலாறு' என்பது இந்துப் பெருமத நினைகவுகளையும் கொண்டு எழுதப்பட்டவை. ரெண்டும் ரெண்டு வேறுபட்ட சிந்தனை மற்றும் தொண்மங்களைம் அடிப்படையாகக் கொண்டவை. 'இந்துக்களை, ஒரு அமைப்பிற்குள் கொண்டு வந்து, அவர்களை இராணுவமயமாக்கலுக்காக (militarization) இந்து தேசியவாதிகளால் புதிதாக பயன்படுத்தப்பட்ட ஒரு ஒழுங்குமுறையே (discipline) 'வரலாறு'. இவர்களது 'இந்திய நாகரீகம்' என்பது, பல 'காப்பிய கலாச்சார' தொண்மங்களால் கட்டமைக்கப்பட்டது. இவர்கள் எல்லாவற்றையும் வரலாற்றைக் கொண்டும், முடியாத இடங்களில் தொண்மங்களைக் கொண்டு நியாயப்படுத்துவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்கள். 'வரலாறு' என்பது காலணீயத்தால் உருவாக்கப்பட்டது மட்டுமல்ல, காலணீய கட்டுமானத்துடன் உறவுடையதாகும்' என்பதை நினைவு கொள்வது அவசியம். (விரிவான விளக்கத்திற்கு Creating A Nationality -Ch.3 page:56-69 - Oxford India Paperbacks, 1997-Ashis Nandy, Shika Trivedy, Shai Mayaram & Achyut Yagnik)

கடைசி காட்சியை அறங்கேற்றும் முகமாக, ரதயாத்திரை சோமநாதபுரத்தில் துவக்கப்பட்டது। சோமநாதபுரம் என்றவுடன் நமக்கு இந்திய வரலாற்றுப் பாடத்திட்டத்தில் மிகச் சிறுவயது முதல் சொல்லப்பட்டு வந்திருக்கும், கஜனி முகம்மது என்கிற 'முஸ்லிம்' அரசனால் பலமுறை படையெடுக்கப்பட்டு, அங்குள்ள கோவிலின் சொத்துக்கள் சூறையாடப்பட்டது நினைவிற்கு கொண்டுவரப்பட்டது(2)। ரதயாத்திரையில் பயன்படுத்தப்பட்ட ரதத்தின்(3) சாரதி (தேரோட்டி') ஒரு 'முஸ்லிம்' இவர் இந்துவாக இருந்து ஒரு முஸ்லிம் பெண்ணை காதலித்து, அதனால் முஸ்லிமாக மாறி திருமணம் செய்து கொண்டவர்। ஆனால், ஒரு 'முஸ்லிம்' என்பது மட்டுமே பிரபலமாக்கப் பட்டது.) இற்கு பின் உள்ள சொல்லப்படாத கதை 'கஜனி' அல்லது முஸ்லிம்களால் ஏற்பட்ட அவமானத்திற்கான பழி உணர்ச்சி என்பதுதான். இதில் கவனத்தில் நிறுத்த வேண்டியவை, 1. 'கஜனி' முகம்மதை முன்வைத்து அனைத்து பாமர முஸ்லிம்களையும், குற்ற உணர்வு உள்ளவர்களாக மாற்றுவது. இதன் நீட்சியாக, பாபர் மசூதி இடிக்கப்பட்டால் ஏற்றுக் கொள்வதற்கான முன்-தயாரிப்பு செய்யப்படுகிறது. 2. இக் குற்ற உணர்வில் இருந்து விடுபட, அல்லது 'மன்னிப்பு' வழங்கும் முகமாக, ரதத்தை ஓட்டிய 'முஸ்லிமை'-ப்போல, எல்லா முஸ்லிம்களும் தங்களது 'வரலாற்றுத் தவறை' பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டுவதன் மூலம் சரி செய்து டகொள்வதற்கான வாய்ப்பு வழங்கப் படுகிறது. 3. முஸ்லிம் அனைவரும் ஒருவகை உணர்வுகளில் இல்லை என இரண்டாக பிரிக்கும், அதாவது, முஸ்லிம் மற்றும் இந்து-முஸ்லிம் என்பதாக, அரசியல் தந்திரம் செயல்படுத்தப் பட்டது. இதுவே 'முஸ்லிம்கள் தங்களது கடவுளாக இராமனை ஏற்றுக் கொள்ள வேண்டும்' என்கிற கூற்றாக வடிவம் பெற்றது. இதன்மூலம் இராமன் - இந்திய தேசியத்தின் கடவுளாக மாற்றப்படுகிறான்(4).



  • (2) கஜணி முகம்மதுவின் சோமநாதபுர படையெடுப்பு பற்றி ரொமிலா தாப்பர் முன்வைக்கும் வரலாற்றுத் தகவல்கள் வரலாற்று உருவாக்கத்தில் கதையாடலின் (narrations) அரசியலை வெளிப்படுத்துகிறது. இப்படையெடுப்பு குறித்து 5-வகை கதையாடல்கள் உள்ளன என்கிறார் தாப்பர். 1. துருக்கிய-பார்சிய கதையாடல் - தென்மேற்கு ஆசிய வரலாற்றில் அரேபிய - பார்சிய அதிகார உருவாக்கம், இஸ்லாத்துடன் உள்ள உறவை அடிப்படையாகக் கொண்டேஉருவாகுகிறது. கஜனி முகம்மதுவின் சோமநாதபுர படையெடுப்பு, பார்சிய கதையாடலில், கஜனியை ஒரு 'இஸ்லாமிய வீரனாக' (Champion of Isalm) காட்டுவதன் மூலம், அரேபிய இஸ்லாமின் மீது ஆதிக்கம் வகிக்கும் வாய்ப்பை அளிக்கிறது. அதாவது, குர்ரானில் சொல்லப்பட்ட அரேபிய சமூகத்திற்கு முந்தைய லாட் (Lat), உஸ்ஸா (Uzza) மற்றும் மனாத் (Manat) என்கிற மூண்று கடவுள் சிலைகள் உடைக்கப் படவேண்டியவையாக இஸ்லாமை உருவாக்கிய முகம்மதுவால் முன்வைக்கப்பட்டன. அவற்றில் இரண்டு முகம்மது காலத்திலேயே உடைக்கப்பட்டது. பிறிதொன்றான மனாத் (சோமனாத் என்பதை Su-Manat மனாத்தின் இடம் என்கிற அரபி சொல்லாக கூறப்படுகிறது. இது லிங்க வழிபாடை ஒத்ததாக சொல்லப்படுகிறது.) சோமநாத புரத்தில் இருப்பதாக நம்பப்பட்டு அதனை உடைக்கும் ஒரு புணிதப் போராக வர்ணிக்கப்படுகிறது. இதன் மூலம் பார்சி-துருக்கிய ஆதிக்கம் இஸ்லாதத்திற்குள் நிறுவப்படுவதற்கான முயற்சியை உணரலாம். தென்மேற்கு ஆசியாவில், அரேபிய, துருக்கிய, பாரசீக வரலாறு என்பது இஸ்லாமின் வளர்ச்சி / வீழ்ச்சியுடன் தொடர்பு கொண்டதாக இருந்ததை, அவ்வரலாற்றை படிப்பவர்கள் காண முடியும் (பார்க்க 'தென்மேற்கு ஆசிய வரலாறு'- க. அசதுல்லா-த.பா.நி.). 2. ஜைன-சைவ முரண்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள கதையாடல். சிவனைவிட மகாவீரர் சக்தி வாய்ந்தவர் என்பதால் அவரது சிலைகள் உடைக்கப்பட வில்லை என்பதைப்போல இப்பிரச்சனையை சைவ/ஜைன முரணாக விளக்குகின்றன. 3. சமஸ்கிருத கல்வெட்டுகள் சோமநாத புரம் கோவில் தாக்கி அழிக்கப்பட்டதைப் பற்றி அதிகமாகவும், முக்கியத்துவம் கொடுத்தும் குறிப்புகளைக் கொண்டிருக்கவில்லை. 12-ஆம் நூற்றாண்டில் அக்கோவிலுக்கு செல்லும் யாத்ரீகர்களை தாக்குவதும், திருடுவதும் அருகில் இருந்த இந்து மன்னர்களால் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வந்துள்ளது. சோமநாத புரத்தில் மசூதி ஒன்று கட்டப்படுவதற்காக, அங்கு குடியேறி இருந்த அரேபிய முஸ்லிம்களுக்கு நிலம் ஒன்று விற்கப்பட்டதிற்கான பத்திரம் அன்றே அரேபி-சமஸ்கிருதத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்து, சோமநாதபுரத்தின் மீது படையெடுத்த துருக்கிய சுல்தான்களுக்கு எதிராக, சோமநாதபுரத்தைச் சேர்ந்து அரேபிய முஸ்லிம்களும் போராடி உள்ளனர். அப்போராட்டத்தில் இறந்து போன பரீத் என்கிற முஸ்லிமின் நினைவாக ஒரு கல்வெட்டு வெளியிடப்பட்டுள்ளது. 4. பிரிட்டிஸ் House of Commence-ல் இப்பிரச்சனை இந்து-முஸ்லிம் பிரச்சனையாக விவாதிக்கப்பட்டு, இந்துக்களின் உணர்வுற்கு மதிப்பளிப்பதாக கூறி கொள்ளையடிக்கப்பட்டதாக நம்பப்பட்ட இண்டு சோமநாதபுரம் வாயிற்கதவுகளை, ஆங்கிலேயப்படை பாரசீகத்திலிருந்து மீட்டு வந்தது. ஆனால், அவ்விரண்டு கதவுகளும், இந்தியாவிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டதில்லை (அது எகிப்திய வேலைப்பாடுகளைக்கொண்டிருப்பதால்) என நிரூபணம் ஆனவுடன், அதனை தூக்கி ஆக்ராவில் ஒரு கோட்டைக்குள் போட்டு விட்டனர். ஆங்கிலேய ஏகாதிபத்தியமே முதன் முதலாக இந்த பிரச்சனையின் வகுப்புவாத விதையை ஊன்றி, நீருற்றி வளர்த்தது. 5. K.M.. முன்சி என்பவரால் முன்வைக்கப்பட்ட 'இந்துக்களின் ஆழ் மனதிற்குள்ளான அவமான உணர்வு' துடைத்தெறியப்படவேண்டும் என்பதான வகுப்புவாத கதையாடல். இது விரிவாக பேசப்பட வேண்டியது. (Somanatha and Mahmud- Romila Thapar - Frontline April 23,1999) ஆக, ஒரு வரலாற்று நிகழ்வு என்பது பல்வேறு கதையாடல்மூலம் அரசியல் நிகழ்வுகளாக மாற்றப்பட்டு, மக்களினத்தின் வாழ்வுடன் பங்கு பெறுவதாகிறது. ஒவ்வொரு சமூகமும், வரலாற்றை வாசிப்பதன் மூலம், தனதுகால அரசியல் வரலாற்றாக அதனை மாற்றிவிடுகிறது. கஜனி முகமதுவின் சோமநாதபுர படையெடுப்பு என்பது இந்திய வகுப்புவாத சக்திகளின் கையில் நிகழ்கால வரலாறாக மாற்றப்பட்டுள்ளது. அது முன்சி கூறியதுபோல 'இந்துக்களின் ஆழ்மனதில் ஒருவகை 'அவமான உணர்வாக' இறக்கப்பட்டதாக கூறி அதனை கிளறிவிடுவதாக இன்றைக்கான அரசியல் நிகழ்வுகள் வரலாற்றை உருவாக்கிக் கொண்டுள்ளன.


  • (4) இந்தியாவின் சில மாநிலங்களில் 1920-வரை இந்து-முஸ்லிம் இருவரும் எதிரேதிரே சந்தித்துக் கொண்டால் 'ஜெய் ராம்ஜி' என்றும், 1991-வரை 'ஜெய் ராம்ஜி கி', 'ஜெய் சீதா ராம்' என்றும் வணங்கிக் கொள்ளும் பழக்கம் இருந்து வந்துள்ளது. (CAN, பக்.-4) 'ராமன் இந்திய மக்களால் 'புருஷோத்தம்' என்று ஏற்றுக் கொள்ளப்பட்டவன் என்றும், கவிஞர் முகமது இக்பாலால் 'Immam-e-Hind ' (இந்திய இமாம்) எனவும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர் என்றும், வைணவரின் வணக்கத்திற்கு உரியவராக, அவதாரமாகக் கருதப்படும் ராமன், வைணவர்களால், 300-400 ஆண்டுகளாக, 'ராம் ஜென்மஸ்தான் மந்திர்' என்ற பெயரில் அயோத்தியில் வேறு கோவில் ஒன்றில் வணங்கப்பட்டு வருவதாகவும், இந்த இயக்கம் வைணவர்கள் அல்லாத, ராம வணக்கத்திற்கு எதிராக முன்பு பேசிவந்த ஆரிய சமாஜ மற்றும் தாந்ரீகர்களால் வழி நடத்தப்படும், அரசியல் ஆசைகொண்ட இயக்கம்' என்பதாக சையத் சகாபுதீனால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது (CAN பக்.-40);. அயோத்தியின் சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள ராமர் கோவிலில் பூசை நடத்தும் தலைமை அர்ச்சகர் லால்தாஸ் கூறியவை சிந்திக்கத்தக்கவை – 'சைவர்கள் ராமனை ஒரு அரசன் என்கிற மனிதனாக கருதுபவர்கள், ஆணால், வைணவர்கள் ராமனை 'பிரம்மமாகக் கருதுபவர்கள்'(CAN பக்.-47) (பிரம்மத்-திற்கு பிறப்பிடம் கிடையாது) 'இந்தக் கோவிலில் நடக்கும் உண்மைகளைத் தெரிந்து கொண்டால், நீங்கள் நாத்திகராக மாறிவிடுவீர்கள்' (CAN பக்.- 49). மத நம்பிக்கைகளைவிட அரசியலே பிரதானமாக இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார் லால்தாஸ் பல்வேறு உதாரணங்களால். (இவர் 1993-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்(CAN முன்னுரை). இஸ்லாமிய அடிப்படைவாத மற்றும் இந்து மீட்புவாத அரசியலின் விளைவே பாபர் மசூதி தகர்ப்பு ஆகும்.

    (3) ராமாயணத்தில் ராமருக்கு ரதம் இல்லை. ராவணன் மட்டுமே, ரதம் போன்ற முன்னேறிய போர்த் தொழில் நுட்பங்களைக் கொண்டிருந்தான் (வால்மீகி மற்றும் துளிசிதாஸ் ராமயணம் -quotaed from CAN பக். 40). கிருஷ்ணர் மட்டுமே ரதம் வைத்திருந்தவர். குறிப்பாய் மகாபாரத கிருஷ்ணர் (3-1). ரத யாத்திரைக்கான ரதமும், கிருஷ்ண ரதம் போன்றே (இது மகாபாரதத் T.V.-த் தொடரில் வரும் ரத அமைப்பை ஒட்டியது. பரவலாக, கிருஷ்ண ரதமாக படங்களில் பார்க்க கூடியது), விலை உயர்ந்த பழைய மாடல் அமேரிக்க செவர்லெட் காரின் மீது (இது, சுதேசியம், விதேசியம் இணைந்த ஒரு கலவை ரதம்), அலங்கரிக்கப்பட்டிருந்தது. இது ராம- கிருஷ்ணக் கலாச்சாரம் இணைந்த ஒன்று (CAN பக். 40).

    (3-1) மகாபாரத கிருஷ்ணக்கலாச்சாரம், 19-ஆம் நூற்றாண்டிற்கு பிறகு உருவாக்கப்பட்ட ஒன்று। கிருஷ்ணர், மகாபாரதத்தின் (கீதையின் கிருஷ்ணர்) மூலமும், பாகவத புராணங்கள் (கோபிகா கிருஷ்ணர் - யாதவரின் கடவுள்) மூலமும் அறியப்படும், இரண்டு வேறுபட்ட கலாச்சாரங்கள் இருப்பதாக அறிஞர்களால் சுட்டிக் காட்டப்படுகிறது. கிருஷ்ணர் 19-ஆம் நூற்றாண்டில் சிறுதெய்வ வழிபாட்டிலிருந்து பெருந்தெய்வ வழிபாட்டிற்கு மாற்றப்படுகிறார். (ஐராவதி கார்வே- யுகாந்தா, P.T.S. அய்யங்கார் - History of Tamils, டி.டி. கொசாம்பி – பண்டைய இந்தியா மற்றும் CAN.) இதில் பக்தி கலாச்சாரம் ஒரு முக்கிய பங்கை வகித்துள்ளது எனலாம்.


இவ்வாறாக, முஸ்லிம் எதிர்ப்பு என்கிற 'கருத்து வலயத்தை' உருவாக்குவதன் மூலம், முஸ்லிம்கள் குறித்து ஒரு சொல்லாடல் களத்தை கட்டமைக்கிறது। இச்சொல்லாடலில், இந்திய முஸ்லிம்கள் 'பிறர்'களாக (Others) (5) மாற்றப்படுகிறார்கள்। அவர்களது, இந்திய மண்ணுடன் ஆன அனைத்து வரலாற்று நினைவுகளையும், அவர்கள் அல்லாத பிறரின் நினைவிலிருந்து ஒட்டுடிமாத்தமாக அழித்து வேறு ஒரு வரலாறு, 'புண்ணிய பூமி' என்கிற நிலப்பரப்பினைக் கொண்டதாக எழுதப்படுகிறது. இப்புண்ணிய பூமியின் ஆத்மாவாகவும், இதன் அரசமைப்பிற்குள் ஆட்சி செலுத்தும் மன்னனின் உடலாகவும் இராமன் மாற்றப்படுகிறான். இந்த இராமன், பல்வேறு இராமயணங்கள் முன்வைக்கும் இராமன் அல்ல. இந்திய மதவாத சக்திகளால், TV-ன் 'prime time'-ல் வந்து உலவிய ஒளிர்திரை இராமன், என்பதுதான் முக்கியம். இது வெறும் தகவல் தொடார்பு சாதனத்தின் வெற்றி மட்டுமல்ல, வரலாற்று நினைவை மறு உருவாக்கம் செய்வதும், அதனை அழித்து புதிய வரலாற்றை எழுதுவதும், அதற்கான பரப்பாக பாமர உடல்-தளங்களும், மன-தளங்களும் உருவமைக்கப்பட்டதுமே.



  • (5) இந்த பிறர்களாக மாற்றப்படுவதற்கான ஒரு தன்னிலையாக்கம், வரலாற்றின் வழியாக, ஒரு குறிப்பிட்ட மண்ணிற்கு சொந்தம் - சொந்தமின்மை அல்லது உள்ளே இருப்பவர்கள் (பூர்வீகம்) - வெளியில் இருந்து வந்தவர்கள் (குடியேறிகள்) என்பதாக மக்களினம் அவர்களது மொழி, இன, மத, கலாச்சாரத் தனித்தன்மைகள் வழியாக அடையாளப்படுத்தப்படுகிறது। வரலாறு எழுதவேண்டிய தேவையே, ஒரு நிலப்பகுதிக்கு உள்ளே - வெளியே என்கிற இரட்டை முரண்களின் (binary) (அதாவது Same X Other) வழியாகத்தான் எழுகிறது। வரலாறு என்பது ஒரே வகையான (same) மக்கள் கூட்டத்தையும், அம்மக்களை ஒரு வரலாற்றுத் தன்னிலைக்குள் அடைப்பதன் மூலம், நிலத்தை மையமானதாகவும் கொண்டேஅமைகிறது। இந்திய வரலாறு குறிப்பாக 'இந்துத்துவா வரலாறு' முஸ்லிம்கள், சீக்கியர்கள் மற்றும் சிறுமத, சிறு கலாச்சாரங்களைக் கொண்ட மக்கள் கூட்டத்தை 'பிறர்'களாக மாற்றப்படுவதன் மூலமே எழுதப்பட முடியும். 'இந்துத்துவா' என்பது முஸ்லிம் மற்றும் சிறுபாண்மையினரை மட்டுமின்றி எல்லாவித தொல்குடி மற்றும் சிறு கலாச்சாரங்கள், சிறு மதங்கள், சிறு மொழிகள் ஆகியவற்றினையும் கூட வெளித்தள்ளக் கூடியதாக உள்ளது. இலங்கை சிங்கள பேரினவாத வரலாறு என்பதும், இப்படித்தான், தமிழர்களை வெளியிலிருந்த வந்த 'இந்திய வம்சா வழியினர்' என்கிற 'பிறர்'-களாக மாற்றி பேரிணவாத அரசியலாக வடிவெடுத்தது.

திருமணம் எனும் உடல் ஒடுக்க எந்திரம்

உறவுமுறை திருமணங்கள் குறித்து கோவி. கண்ணன் அவர்களின் பதிவு ஏற்படுத்திய மேலதிக சிந்தனையின் விளைவாக இங்கு சில கருத்துக்கள் விரித்துரைக்கப்படுகிறது. கோவி.கண்ணனின் கட்டுரை இணைப்பு உங்கள் பார்வைக்கு: http://govikannan.blogspot.com/2007/09/blog-post_06.html

1. திருமண முறைகளைப் பொறுத்தவரை இன்றைய மதங்களுக்கு முன்பே அல்லது மதங்கள் இயற்கை தெய்வ வழிபாடாக இருந்த காலங்களில் உருவானவை. இனக்குழுக்களுக்கிடையிலான இம்முறை மதங்களின் திருமறை(ரை)கள் (வேதம் மற்ற பிறமத திருமறைகள்) மூலம் ஒழுங்குப் படுத்திக் கொள்ளப்பட்டன பின்னால். திருமண சடங்குகளை ஒழுங்குப்படுத்துதல் என்பது சமூகத்தின் இயக்கம் கொள்ளும் ஆண் மற்றும் பெண் உடல்களை ஒழுங்குப்படுத்துவதாகும். வேறுவார்த்தைகளில் சொன்னால் இனக்குழு உடல்களை ஆண் மற்றம் பெண் என்கிற பாலின (gender) உடல்களாக கட்டமைத்தது மதங்களே. எனவே இவ்வுடல்கள் இயங்குவதற்கான வெளிகளையும் முறைமைகளையும் வகுத்து அளித்தன மதங்கள்.

2. முக்கியமான கேள்வி ஏன் திருமணமுறை உருவானது அது மனித குலத்திற்கு என்ன தேவையை நிறைவு செய்கிறது? அடிப்படையில் இரு இனக்குழுக்கள் ஒன்றுடன் ஒன்று ஊடு கலக்க பரிமாறிக் கொள்ளுதலே திருமண முறையாக உருவெடுத்தது. இதனை மாணுடவியலில் "பரிசுப் பொருள் பரிமாற்றம்" என்பார்கள். இனக்குழுச் சமூகத்தில் உடல்களே அவர்களது உரிமைக்குரிய சொத்தாக பாவிக்கப்பட்டதால் உடல்களை பரிமாறிக்கொள்வதன் மூலம் இரண்டு குழுக்களும் நெருக்கமாக ஒன்று கலக்க முடியும். ஒரு இனக்குழுக்குள் உள்ள உடல்களை அக்குழுக்களே திருமணம் செய்துகொண்டால் பரிமாற்றுவதற்கான தனி உடல்கள் இல்லாத நிலை உருவாகிவிடும் என்பதால் குழுவுக்கள் திருமணம் என்பது தடை செய்யப்பட்டது. இதனையே taboo என மாணுடவியல் குறிக்கிறது.

3. குறிப்பான இந்தியச் சூழலுக்கு வருவோம். இந்தியாவில் புத்தமத எழுச்சிக்குப் பிறகு பிராமண வைதீக மதமானது தனது வர்ண தர்மத்தை சாதிய தர்மமாக மாற்றுகிறது. அதாவது தனது தலைமைக்கு கீழ் பல்வேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு பொது அமைப்பை (இன்று கூறப்படும் இந்து மதம்) உருவாக்குகிறது. ஜாதி என்கிற சொல் புத்தர் காலத்தில் இனக்குழுவைத்தான் குறித்தது. அதாவது புத்தரின் சாக்கிய குலம் என்பது சாக்கிய ஜாதி என்றே பண்டைய புத்த மற்றும் சமஸ்கிருத பிரதிகளில் குறிக்கப்படுகிறது. தனித்த குழுக்கள் ஒரு பொதுவான அமைப்பிற்குள் அதாவது வைதீக பிரமாண மத அமைப்பிற்குள் வந்தபோது அக்குழுக்களது தனித்த அடையாளத்தை காப்பாற்றிக் கொள்ளவும் தனது பிராமண வர்ணத்தை காக்கவும் அகமண முறையை பின்பற்றும்படி மணு தர்மம் விதிமுறைகளை வகுத்தது. அகமணமுறை என்பது ஒரு குழு அல்லது ஒரு சாதிக்குள் மட்டுமே திருமணம் செய்துகொள்ளும் முறை. மேலே இனக்குழுக்கள் உருவான காலத்தில் நடந்த பிறமணமுறை மணுதர்மத்தால் தடை செய்யப்படுகிறது. இதுவே சாதிகளின் தோற்றமாக மாறுகிறது என்பதுடன் சாதிகளி்ன அழயாத் தன்மையும் காக்கப்படுகிறது இன்றுவரை. சாதிகளின் வாழ்வு என்பது இத்திருமணமுறைகளில்தான் செறிந்துள்ளது.

4. அடுத்து உறவுமுறை திருமணத்திற்கு வருவோம். உறவுமுறை திருமணம் என்பது அகமண முறைக்குள்ளேயே சொத்தையும் வர்க்க அந்தஸ்தையும் காப்பதற்கான ஏற்பாடாகும். அத்தை மகளை மணப்பதும் சித்தப்பா/பெரியப்பா மகளை மணப்பதும் இருவேறுபட்ட சொத்துப் பரிமாற்றத்தின் அடிப்படையில் உருவானவை.

5. இனக்கழு உருவாக்கத்தின் முதல் அமைப்பு தாய்வழிச் சமுகம் ஆகும். தாய்வழிச் சமூகத்தின் மையமாக ஒரு தாய் இருக்கிறாள். (இவ்வகை தாய்களாக உருவானவைதான் மாரியம்மா, காளியம்மா என்கிற கிராம தாய் தெய்வங்கள்.) தாய்தான் இந்த குழுவின் மையம் (அத்தகைய குழுக்கள்தான் இன்று சாதிகளாக உருவெடுத்துள்ளன.) அவளே அக்குழவை காக்கும் தெய்வம். தந்தை என்கிற உறவுமுறை இக்குழுவில் கிடையாது. தந்தையின் இடம் தாய்மாமனால் நிறைவு செய்யப்படுகிறது. எனவே தாய்மாமனை திருமணம் செய்துகொள்வது தாய்வழிச் சமூகத்தி்ல் தடை செய்யப்பட்ட ஒன்று. அதனால்தான் தந்தையின் ஸ்தானத்தில் தாய்மாமன் சீர் என்பது சகோதரியின் பிள்ளகைளுக்கு வழுங்கும் சொத்தாகும். அது தாய்மாமனின் உரிமையாக இன்றுவரை தொடர்கிறது.

6. தாய்வழிச் சமுகத்திலிருந்து தந்தையை மையமாகக் கொண்ட சமூகங்கள் அதாவது தந்தைவழிச் சமூகங்கள் உருவானபோது தாயும் பெண்களும் உரிமையற்ற சொத்துகளாக மாற்றப்பட்டனர். பெண் உடல் ஆணிய துய்ப்புக்களமாகவும் வாரிசைப் பெற்றுத்தரும் தனிச்சொத்தை காக்கும் ஒரு எந்திரமாகவும் மாற்றப்பட்டது. எனவே தனது சொத்தைக் காக்க சகோதரன் சகோதரி பிள்ளைகளை மணக்கிற உறவுமுறை திருமணத்தை உருவாக்கினர். சொத்தை குடும்பத்தின் தந்தையாகிய மூத்தவன் கீழ் வைத்துக் கொள்வதற்கான ஏற்பாடு இது. இம்முறையில் பெண் பரிமாற்றுப் பண்டமாக அதாவது சொத்தாக பாவிக்கப்படுகிறாள். அதற்கு பகரமாக பெண்ணிற்கு பரிசப்பணம் தரும் முறை உருவானது. இன்றுவரை எல்லாமத திருமண சடங்குகளிலும் பரிசப்பணம் என்பது அடிப்படையாக உள்ளது. இஸ்லாமில் இதனை மகர் என்பார்கள்.

7. தாய்வழிச் சமூகங்களின் எச்சங்களை கொண்ட குழுக்களில் அல்லது சாதிகளில் ஆணை பரிமாற்றுப் பொருளாக பாவிக்கின்றன. அதாவது தனிச்சொத்தாக. இங்கு குடும்பச் சொத்து தாயின் குழுவை விட்டு போகாமல் தடுக்கப்படுகிறது. இம்முறை தமிழகத்திலும் ஈழத்திலும் "மருமக்கள் வழி மான்மியம்" என்பதாகவும் கேரள நாயர்களில் இன்றளவும் நடைமுறையில் இருக்கிறது. ஆண்கள்தான் திருமணத்திற்கு பிறகு பெண் வீட்டோடு செல்லும் வழக்கம் உள்ளது. இம்முறையானது தந்தைவழிச் சமுகத்தில் ஆண் பெண் வீட்டிற்கு போவதற்க பதிலாக பெண் வீட்டாரிடம் வரதட்சிணையாக பணம் பெறும் முறையாக சுருங்கி ஆணாதிக்கமாக நடைமுறையில் உள்ளது.

ஆக, திருமணமுறைகள் என்பது உடலை ஒடக்கவும் ஒழுங்குப்படுத்தவும் ஆன மதங்களின் வழியாக ஆதிக்கம் செய்யப்படும் ஒரு தொழில்நுட்பமாகும். குடும்பம் என்கிற கட்டமைப்புகள் இத்தொழில்நுட்பத்தின் வழியாக செயல்படும் எந்திரமாகும். இவ்வெந்திரத்தில் அரைபடும் மூலப்பொருளாக இருப்பது பெண் உடல்களே. அதனால்தான் பெரியார் திருமணங்களே பெண் அடிமைத்தனத்தின் மூலம் என்றார். ஒருவனுக்கு ஒருத்தி என்பது அதன் உண்மையான காதல் அடிப்படையில் கட்டுப்பாடற்ற சமூகத்தில்தான் சாத்தியம். தற்பொழுது காதல் என்பது நிர்பந்தம் அடிப்படையிலானது. விருப்பத்தின் அடிப்படையில் வாழ்வதைவிட நிர்பந்தத்தின் அடிப்படையில் வாழ்தல் என்பதே பெரும்பாலான திருமணங்களின் விளைவாக இருக்கிறது. இதுவே திருமணம் ஏற்படுத்தும் மணோவியல் வன்முறையாக உள்ளது.