சிறுபத்திரிக்கை இலக்கியம் என்கிற சிறு அறைக்குள் புழங்கிய நான், திடிரென பதிவுகள் என்கிற மைதானத்தை அடைந்தவுடன் அரைப்பழக்கம் மைதானம் மட்டும் என்பதாக விரிவான பதிவுகளாக எழுதி ஆடத் தெரியாத நிலை உருவாகி.. பின்னோட்டமேனியாவிற்கு பலியாகவிட்டேன் இறுதியில். பதிவுகளில் எழுதப்படும் எழுத்துக்கள் சிலவேளை எனக்கே அந்நியமாக தெரிவதால்.. பின்னோட்டங்களில் அதிகம் எழுதும்நிலை உருவாகிவிடுகிறது. இதற்கு காரணம், சொந்தமாக சிந்தித்து எழுதுவதற்கு மேல்மாடி காலியாகிவ்டடதால் பிறர் எழுதுவதில் போய் ஒட்டிக்கொண்டு கில்லி அடிப்பது என்பதுதான். அல்லது தத்துவார்த்தமாக உரையாடல் என்பது மிகவும் சுதந்திரமானது என்பதால் பின்னோட்டங்கள் உரையாடலுக்கான சுதந்திர வெளிகளாக இருப்பதால் அதில் பங்குபெறுவதை விரும்புகிறேன் என்றும் கூறிக் கொள்ளலாம். இப்படியாகத்தான் பின்னோட்டங்களே விரிவாக்கப்பட்ட எனது பதிவுகளாக மாறிப்போகிறது. அப்படித்தான் பாருங்கள் இவ்வார நட்சத்திரமாக அடித்து ஆடிக்கொண்டிருக்கும் அ.க.வள்ளியின் இன்றையபதிவில் அவர் கலாச்சாரம் எனும் பெங்களூர் கத்தரிக்காய் பற்றி எழத அதற்கு சில பின்னோட்டர்கள் கலாச்சாரம் என்றால் என்ன? என்று கேட்க ஆடடம் துவங்கியது. சும்மா இருப்பானா இந்த சொக்கன் என்பதைப்போல நானும் கில்லியுடன் போய் இறங்கிவிட்டேன். அங்க அடித்த கில்லியை நாலு பேருக்கு நமக்கு தெரிந்தததைச் சொல்வோம் என்று இங்கு கொஞ்சம் விரிவாக்கி அடிக்கிறேன்.
கலாச்சாரம் (பண்பாடு என்பது நல்ல தமிழ்ச்சொல்) என்பது ஒரு உடலினை சமூகத்திற்கு ஏற்ப முன் நிறுத்துவதற்காக அதன் மீது எழுதப்பட்டிருக்கும் ஒரு சங்கேத மொழியாகும். அதாவது, ஒரு உடலானது என்ன செய்ய வேண்டும்? எப்படி தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும்? எப்படி தனது தானை (அதாவது ego-வை) கட்டமைத்துக் கொள்ள வேண்டும்? எதற்காக மகிழ்ச்சி அடைய வேண்டும்? எதற்காக துன்பம் அடைய வேண்டும்? என்பதை ஒரு கண்காணிப்பு கருவி போலக் கண்காணித்து உடலை வழிநடத்தும் ஒரு எந்திரம். அதற்காக அது கண்கானிக்கும் ஒரு முக்கிய தளம் பாலியலாகும். பாலியலை ஒடுக்குவது அல்லது முறைப்படுத்துவதன் மூலம் பண்பாடானது சமூக அமைப்பை அதன் ஆதிக்க வடிவிலேயே காக்கிறது. அதற்காக சில உடலியல் விழைவுகளை (desires) புறமானதாக ஒதுக்கி அதற்கு தண்டனை வழங்கும் அதிகாரத்தை பெற்றுள்ளது.
உதாரணமாக ஓரிணப்புணர்ச்சி (சரியான சொல் தன்பால் புணர்ச்சி என்பதுதான்) தடை செய்யப்பட்டு அதனை விலக்கியதன் மூலமே திருமணம், குடும்பம் போன்ற நிறுவனங்களையும் காத்துவருகிறது பண்பாடு. இவ்வொதுக்கல் மூலம் மையத்தில் இருபால் புணர்ச்சி என்கிற கலப்பின புணர்ச்சியை கட்டமைக்கிறது. அதுவே உடல்பாலியலின் அடிப்படையாக ஒழுங்கமைக்கிறது. பாலியலை ஒரு குற்றவியல் நடவடிக்கைப்போல பண்பாட்டு காவல் கண்காணிப்பு செய்யுமாறு ஒவ்வொரு உடலின் தன்னிலை என்பது கட்டமைக்கப்பட்டுள்ளது. அதாவது, பாலியலில் எதை செய்வது? எதை தள்ளுவது? என்பதுவரை எல்லாம முன் தீர்மாணிக்கப்பட்ட புணித கட்டமைவுகளுடன் உறவு கொண்டதாக உள்ளது. ஒரு உடல் தன்னைத்தானே கண்காணிப்பதற்கான ஒரு கருவியே பண்பாடு என்றால் மிகையாகாது. பண்பாட்டின் எழதப்படாத விதிமுறைகள் ஒவ்வொரு உடலின் இயக்கத் தன்னிலையாக அதன் நினைவிலியில் உருவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு உடல்அரசியல் நிகழ்வு. உடலின் வேட்கைகளை கண்காணிப்பதுதான் அடிப்படையில் பண்பாடு என்பது.
தன்பாலினப்புணர்ச்சிக்கான உரிமைகள் மற்றும் ஆய்வுகள் குறித்து Queer Theory (தமிழில் இதனை கோணல்கள் பற்றிய கோட்பாடு என்கிறார்கள்) என்கிற ஒரு கோட்பாடு முன்வைப்பது என்னவென்றால் ஆண் மற்றம் பெண் என்கிற பாலின வேறுபாடு (gender difference)என்பது செயலூக்கமிக்க பல நிகழ்வுகளின் மூலமே கட்டப்படுகிறது. ஒரு குழந்தை பிறக்கும் போது பால்தன்மையற்றே இருக்கிறது. அதனை நீ ஒரு ஆண் என்றோ அல்லது நீ ஒரு பெண் என்றோ குறித்து பிரிப்பது முதல் நடவடிக்ககையாக துவங்குகிறது. அதன்பின் பெயர்வைத்தல், உடைகள் போன்ற வேறுபாடுகள் மூலம் திரும் திரும்ப அந்த பால்வேறுபாட்டுச் செயல்முறைகள் நிகழ்த்தப்படுகின்றன. இத்தகைய திரும்ப திரும்ப நிகழத்தப்படும் பால்வேறுபாட்டச் செயல்முறைகள் மூலம் அவ்வுடல் ஆண் அல்லது பெண் என்கிற பாலின அடையாளத்தை தனது தன்னிலையாக கட்டமைத்துக் கொள்கிறது. இக்குழுந்தைகளை பிரித்து வேறுபாட்டை தெளிவாக புரிந்து கொண்டு வளருமாறும் சூழ்நிலைகள் கட்டமைக்கப்படுகிறது. பள்ளித் துவங்கி மயானம்வரை இவ்வேறுபாடு பல்வேறு பண்பாட்டுக் காரணிகளால் திரும்ப திரும்ப அவ்வுடலுக்குள் பதிவுறுத்தப்படுகிறது. "நான் உறுதியளிக்கிறேன்" என்கிற வாசகம் எப்படி ஒரு சத்தியப்பிரமாணமாக சொல்லும் உடலினை பொறுப்பேற்றுக்கொள்ளும் ஒரு செயலூக்கமுள்ள வாக்கியமாக இருப்பதைப்போல, "நான் பெண்" என்கிற வாசகமும் சொல்லும் உடலின் பொறுப்பிற்கான உறுதிப்படுத்தப்பட்ட ஒரு செயலூக்கமுள்ள வாக்கியமாக உள்ளது. இது 'பெண்' என்கிற சமூகம் முன்வைத்திருக்கும் வரையறைகளை உறுதியுடன் ஏற்கும் ஒரு செயலூக்கமுள்ள நடவடிக்கையாகும். இந்நடவடிக்கைகளே பெண்-னை பாலினமாக உருவாக்குகிறது.
இதன்பொருள் பால் (sex) என்பது உயிரியல் நிலமையிலும் பாலினம் (gender) என்பது பண்பாட்டு நிலமையிலும் கட்டமைக்கப்படுவதாகும் என்பதுதான். பெண் என்பது பிறப்பு அல்ல அது ஒரு செயலூக்கமுள்ள ஒரு நிகழ்வாகும் (Performative Act) என்கிறது அக்கோட்பாடு. ஒரு குழந்தையை பெண்ணாக உணரவைப்பது இத்தகைய பண்பாட்டு நடவடிக்கைகள்தான். அதேசமயம் பாலினத்தை ஒருவர் தேர்வு செய்துகொள்ளமுடியாது, ஏனெனில் பிறக்கும்போதே ஒருவர் ஏதேனும் ஒரு பாலினத்தின் அடிப்படையில்தான் குறியிடப்படகிறார். அல்லது பாலினமாதல் என்கிற செயலும் ஒரு உடலின் தன்னிலையும் ஒன்றாகவே உருவாகுகிறது. இங்க நாம் தனது பாலினத்தை தன்னுணர்வுடன் தேர்வு செய்து கொள்ளும் அடிப்படை உரிமையைக் கோரும் திருநங்கைகள் (அரவானிகள்) குறித்து இதனுடன் இணைத்துக் காணலாம். இவர்களை புணிதப்படுத்தியோ அல்லது கேவலப்படுத்தியோ மையத்திலிருந்து ஒதுக்கி தள்ளுகிறது சமூக அதிகாரம்.
பாலியல் நடவடிக்கைகளில் இருபால் புணர்ச்சிமட்டுமே அங்கீகரிக்கப்படவதற்கு இந்த பாலின வகைப்பாடு என்கிற செயல் அவசியமான ஒரு சமூக நடவடிக்கையாகும். இதற்காகத்தான் தன்பால் புணர்ச்சி என்பது இந்த பாலினமாதல் என்கிற செயலுக்கு எதிரானதாக இருக்கிறது மற்றும் இந்த ஒழுங்கை குலைத்துவிடும் அச்சுறுத்தலைக் கொண்டு உள்ளது என்கிறார் இதனை ஆய்வு செய்த ஜுதித் பட்லர் என்கிற ஆய்வாளர்.
"அவன்னா நீயீ.... இதெல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல" (வடிவேலு குரலில் வாசிக்கவும்) என்பதும் என் காதில் விழத்தான் செய்கிறது.
அன்புடன்
ஜமாலன் (10-10-2007 மாலை 04:59 சவுதி நேரம்)
"பெண்" எனும் கட்டமைப்பு - பாலினமாதலின் அரசியல்
Labels: பாலின உருவாக்க எந்திரம்
Subscribe to:
Post Comments (Atom)







8 Comments:
வரவணை பதிவில் உங்க பின்னூட்டம் பார்த்தேன்...பட்டையை கிளப்பும் நகைச்சுவை உணர்விருக்கு உங்களிடம்...தமிழ்மணத்தில் பதிவை சேர்க்கலையா ? நிறைய எழுதுங்க...
அன்புடன்
செந்தழல் ரவி
சோதனைப் பின்னோட்டம் மின் அஞ்சல் follow up ற்காக...
Is that culture only related to human body and the acts regarding to that?
Bcoz of so much emphasis to ethics related to this people who could not fit into that
trying to do it at back and when it goes under control get into criminal activities .
We are not taught morality at all acts. We also know very less people who have practiced such acts at every deed.
If at all some one practices, there will be
people to find fault and criticise.
At the end evrything finally boils down to culture enforced on body.
பாலின வேறுபாடு என்பது தாங்கள் கூறியிருப்பது போல பிறந்த முதல் நாளிலிருந்து வெவ்வேறு செய்கைகள் மூலம் குழந்தையின் மூளைக்குள் திணிக்கப்படுகிறது என்பது ஏற்புடையதே.
ஆனால் இனச்சேர்க்கை குறித்த கட்டுப்பாடு கலாச்சாரப் போர்வைக்குள் பெரிதும் விவாதிக்கப்பட்டாலும், அதையும் தாண்டிய இனப்பெருக்கம் குறித்தான அடிப்படை ஆர்வம் முக்கியம் வாய்ந்தது என்று கருதுகிறேன்.
கலாச்சாரக் கட்டமைப்புகளை முறையாகப் பின்பற்றிய ஒரு ஆண்-பெண் இணையால் இனவிருத்தி செய்ய இயலாமல் போனால் அவர்களின் பாலியல் உறவு எந்தக் கட்டமைப்பிலும் மதிக்கப்படுவதில்லை என்பதையே அதற்கான முக்கியச் சான்றாகக் கொள்ளலாம்.
எவ்வுயிரனத்திற்குமிருக்குமொரு அடிப்படைப் பண்பு தன்னுடைய மரபணுச் சங்கிலி அறுந்துவிடக்கூடாது என்பது. இனப்பெருக்கம் என்ற ஒரு அடிப்படைக் காரணத்தை அடியொற்றியே நிகழ்ந்தாலும், அது வேறு பரிமாணத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ள கட்டமைப்புகளுள் பின்னர் நுழைந்துவிடுகிறது அல்லது நுழைக்கப்பட்டுவிடுகிறது என்பது ஏற்புடையது.
ஜமாலன்,
அச்சிதழ்களைத்தாண்டி இணைய எழுத்து என்ற அடுத்த கட்டத்துக்கு வந்தபின்னாலே அதன் கூறுகளை உள்வாங்கி குவளைக்கேற்றபடி வடிவம் கொளவேண்டியது இயல்புதானே?
கில்லி அடித்தல், பின்னூட்டங்களில் தங்கியிருத்தல் எல்லாம் மாபெரும் பாவச்செயல்கள் அல்ல. :-)
கலாசாரத்தின் வன்முறை தொடர்பாக அநேகமா உங்கள் கருத்துக்களொடு நான் உடன்படவே செய்வேன்.
அதில் எனக்கு மாற்றுக்கருத்துக்கள் இல்லை.
ஆனால் பண்பாடு என்ற சொல்லைப் பயன்படுத்தும்போது சிறிது சங்கடத்தை உணர்கிறேன்.
பண்பாடு என்ற சொல்லை நான் விளங்கிக்கொண்டது இப்படித்தான். (நான் விளங்கிக்கொண்டது தவறகவுமிருக்கலாம்)
பண்படுத்தல், பண்படுதல் என்ற அடிகளினூடு இந்தச்சொல் வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
வாழ்வின் வரலாற்று அனுபவங்களூடு நாம் கண்டடையும் சில நல்ல கூறுகளை இது குறிப்பதாக நினைக்கிறேன்.
எடுத்துக்காட்டாக, வீட்டுக்கு யாரேனும் வந்தால் வெயிலாக இருந்தால் ஏதாவது குளிராக குடிக்கக்குடுக்க வேணும், மத்தியானம் எண்டால், கேட்காமலே சாப்பாடு கொடுக்க வேணும்.
டீ வேணுமா எண்டெல்லாம் கேட்கக்கூடாது,
வயதுக்கு மூத்தவர்களை கொஞ்சமேனும் மரியாதையாக நடத்தவேணும்.
இப்படியாக, எம்முடைய வாழ்க்கையை முன்னைய அனுபவங்களின் திரட்சிகளைக்கொண்டு பண்படுத்துதல்.
தமிழர் பண்பாடு என்றால்,
தமிழர் எனும் மனிதக்கூட்டம், தனது வாழ்விடம், வாழ்பனுவங்களூடு தன்னில் சேகரித்துவைத்திருக்கும் பண்புகளின் தொகுப்பு, அப்படி...
தமிழர் பண்பாட்டில் அவர்கள் ஜல்லிக்கட்டு ஆடுவார்கள் ;-) சோறு அதிகம் சாப்பிடுவார்கள், முஸ்லிம் பண்பாட்டில் இங்கே இலங்கையில் நன்றாக உபசரிப்பார்கள், அயலவர்களுக்கு விழுந்து விழுந்து உதவுவார்கள், சிங்களப்பண்பாட்டில், அவர்கள் வீடு குடிபோனால் பக்கத்து வீடுகள் அனைத்துக்கும் யாரென்றும் தெரியாமல் பால்சோறு கொடுப்பார்கள் அப்படி...
பண்பாடு ஒரு மனிதக்கூட்டத்தின் பண்புகளின் தொகுப்போ என்று எண்ணுகிறேன்.
அறக்கோட்பாடுகள், மதக்கோட்பாடுகளின் வழி வலியுறுத்தப்படும் கருத்துக்கள் அப்படியானவை அல்ல.
அது இலட்சியம் ஒன்றை நோக்கியதாக இருப்பதோடு, ஒரு மனிதக்கூட்டம் "இப்படி இருக்கவேண்டும்' என்று வலியுறுத்துவது.
பண்பாடு ஒரு மனிதக்கூட்டம் எப்படி இருக்கிறது என்பது. அற வலியுறுத்தல் எப்படி இருக்க வேண்டும் என்பது.
இந்த வலியுறுத்தல் மறைமுகமாக அந்த மனிதக்கூட்டம் அப்படி இருக்கத்தயங்குகிறது என்ற பொருளையே தன்னுள் பொதிந்துகொண்டுள்ளது.
அதனால் அது பயங்கர அதிகாரமாக வடிவம் கொள்ள வெளிக்கிடுகிறது.
சொற்பயன்பாடு எதுவாக இருப்பினும் அந்தச்சொல் மூலம் நீன்கள் கருதுவதன் மீதான விமர்சனம் என்ற உள்ளடக்கத்தை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.
மங்கைக்கு...
தாமதமான பின்னோட்டத்திற்கு வருந்துகிறேன்.
உங்களது முதல் கேள்விக்கு. பண்பாடு என்பது உடலுடன் உறவு கொண்டதே. பண்பாடு மட்டுமல்ல எல்லா அறிவுத்துறைகள், அரசியல் துவங்கி தத்தவங்கள், இலக்கியம் அனைத்துமே உடலுடன் உறவு கொண்டதே. எல்லாம் ஆத்மாவே என்பதற்கு எதிரான ஒரு நிலையே இது. ஆத்மாவை மையப்படுத்தாமல் உடலை மையப்படுத்தவதே. இதை பேசுபொருளாக கொண்டதே உடல் அரசியல் என்பது. அறம் என்கிற கருத்தாக்கம்கூட உடலை மையமாகக் கொண்டே கட்டமைக்கப்படுகிறது. குற்றவியல் என்பது இந்த அறத்தினை வன்முறையாக உணரும் ஒரு உடல் கணடடையம் ஒரு வழியே. இதனை குற்றமாக குறியிட்டிருப்பது பொது அறம் என்கிற ஆதிக்க அறிவு சார்ந்த ஒன்றை கட்டமைக்கவே. குற்றத்தை வரையறுத்தால்தன் அறத்தை கட்டமைக்க முடியும். அறம் என்பது மையம் என்றால் குற்றம் என்பது விளிம்பு. மையமற்ற விளிம்போ அல்லது விளிம்பற்ற மையமோ சாத்தியமில்லை.
பொது அறம் என்பது எக்காலத்திலம் எல்லோருக்கும் அல்லது எல்லா உடலுக்குமானதாக இருக்க வாய்ப்பில்லை. அப்படி என்றால் பொதுவான எல்லா உடலுக்குமான ஒரு அறம் தேவையா? இல்லயா? அதை எப்படி வறையறுப்பது? என்பது சிக்கலான ஒரு பிரச்சனைதான். இதை நாம் சிக்கலான பிரச்சனையாக புரிந்து கொள்ளும்போதே அறம் குற்றம் குறித்த நமது பார்வை விரிவடைகிறது. குறைந்தபட்சம் அதிகாரத்தின் ஒரு ஊடகமாக நாம் மாறி குற்றம் பற்றிய பேச்சுக்களை பெருக்காமல் அத்தகைய உடல்களை புறம் ஒதுக்கி விளிம்பிற்குத் தள்ளாமலாவது இருக்கமுடியும். நாம் நம்மை ஒரு நீதிவானாக நிலைநிறுத்த முயலாமல் சக உடலுக்கான வலி இதத்தை அனுமதிக்கும் ஒத்துப்போகும் அல்லது குறைந்தபட்சம் பிற உடலை இகழாத ஒரு உடலாக நம்மை கட்டமைத்தக் கொள்வது அவசியம். இதுவே கலாச்சார கண்காணிப்ப காவல் என்கிற அதிகாரம் தந்து 'வாழும் கடமை' என்கிற பணியிலிருந்து வெளியேறுவதற்கான ஒரு வழி. உங்கள் கருத்தை முன்வைத்து சிலவற்றை பேச வாய்ப்பு தந்து உங்களுக்கு நன்றி.
-அன்புடன்
ஜமாலன்.
கையேடு said...
//பாலின வேறுபாடு என்பது தாங்கள் கூறியிருப்பது போல பிறந்த முதல் நாளிலிருந்து வெவ்வேறு செய்கைகள் மூலம் குழந்தையின் மூளைக்குள் திணிக்கப்படுகிறது என்பது ஏற்புடையதே.
ஆனால் இனச்சேர்க்கை குறித்த கட்டுப்பாடு கலாச்சாரப் போர்வைக்குள் பெரிதும் விவாதிக்கப்பட்டாலும், அதையும் தாண்டிய இனப்பெருக்கம் குறித்தான அடிப்படை ஆர்வம் முக்கியம் வாய்ந்தது என்று கருதுகிறேன்.//
உண்மைதான். இனப்பெருக்கம் குறித்த ஆர்வம் என்பது உடலை பெருக்குதல் அல்லது உறபத்தி செய்தல் என்கிற இனவலிமை உருவாக்கத்துடன் உறவு கொண்டது. இது பாலியல் என்கிற இயல்பூக்கத்துடன் உறவு கொண்டது. இயற்கையில் இது ஒரு உடலியக்கச் செயலாக இருப்பதால்தான் இனப்பெருக்கம் என்கிற செயலாக இது இன்றும் இயக்கமடைந்து வருகிறது. துறவறம்தான் மோச்சத்திற்கான ஒரே வழி. அதனை பிரம்மச்சர்யத்தின் மூலம் மட்டுமே அடைய முடியும் என்கிற நிலைமட்டுமே இருந்து எல்லோராலும் ஆத்மாவே மையம் அதனை முழுமையடையச் செய்வோம் உடல் புணிதமற்றது என்பதாக ஆத்மா முதல்வாத்தை பின்பற்றியிருந்தால் மனித இனம் என்பதே அழிந்து போயிருக்கும்.
அழகியல் இலக்கியம் துவங்கி வாழ்வதற்கான அனைத்து வேட்கையிலும் பாலுந்தம் என்பது அடிப்படையாக உள்ளது. இதையே வேறுவிதமாகக் கூறினால் வேட்கை என்பதே பாலுந்தம்தான். பாலுந்தம் என்பது பிறப்பு உறுப்புகளை மட்டுமே மையமாகக் கொண்டதல்ல. உடலின் அனைத்து பகுதியிலும் அதற்கான வேட்கை உள்ளது. இது உடலுக்குள் எழுதப்பட்டிருக்கும் அடிப்படை செய்தி. இச்செய்தியை அறவழிப்படுத்துதல் என்கிற செயல்மூலம் மதங்கள் கட்டுப்படுத்தி channalize செய்யும்போது இது ஒடுக்கப்பட்டும் உள்ளுக்குள் பெருக்கப்பட்டும் கிடைக்கும் வழிகளில் miscommunicate ஆகி வெளிப்படுகிறது. அதனால் அதிகாரம் பாலியலை channalize செய்வதாக ஒரு குறிப்பிட்டவகை பண்பாட்டுக்குட்பட்டதான பாலியலை கட்டமைக்கிறது. அதன் மூலம் பாலியலை பண்பாட்டின் மையமானதாக மாற்றுகிறது.
//கலாச்சாரக் கட்டமைப்புகளை முறையாகப் பின்பற்றிய ஒரு ஆண்-பெண் இணையால் இனவிருத்தி செய்ய இயலாமல் போனால் அவர்களின் பாலியல் உறவு எந்தக் கட்டமைப்பிலும் மதிக்கப்படுவதில்லை என்பதையே அதற்கான முக்கியச் சான்றாகக் கொள்ளலாம்.//
உங்கள் புரிதல் சரியானதே. இனவிருத்தியை மையமாக வைத்திருப்பது ஒரு சமூக மறு உற்பத்திக்கான அடிப்படையாக இருப்பதால்தான். பாலியல் என்பது பசி மற்றும் தூக்கம் போன்று உடலுக்கான ஒரு வேட்கை என்பதை வெறும் இன உற்பத்தியுடன் இணைத்ததாக கட்டமைத்திருப்பது வாரிசு என்கிற சொத்தை பாதுகாக்கும் ஒரு தனிச்சொத்தின் பாதுகாப்பு ஏற்பாடே ஆகும். இது வர்க்க ஏற்றத்தாழ்வின் ஒரு தவிர்க்க இயலா விளைவாகும்.
//எவ்வுயிரனத்திற்குமிருக்குமொரு அடிப்படைப் பண்பு தன்னுடைய மரபணுச் சங்கிலி அறுந்துவிடக்கூடாது என்பது. இனப்பெருக்கம் என்ற ஒரு அடிப்படைக் காரணத்தை அடியொற்றியே நிகழ்ந்தாலும், அது வேறு பரிமாணத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ள கட்டமைப்புகளுள் பின்னர் நுழைந்துவிடுகிறது அல்லது நுழைக்கப்பட்டுவிடுகிறது என்பது ஏற்புடையது.//
உங்களது புரிதலுக்க நன்றி.
அன்புடன்
ஜமாலன்.
மு.மயூரன் said...
//கலாசாரத்தின் வன்முறை தொடர்பாக அநேகமா உங்கள் கருத்துக்களொடு நான் உடன்படவே செய்வேன்.
அதில் எனக்கு மாற்றுக்கருத்துக்கள் இல்லை.//
புரிதலுக்கு நன்றி.
//பண்படுத்தல், பண்படுதல் என்ற அடிகளினூடு இந்தச்சொல் வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
வாழ்வின் வரலாற்று அனுபவங்களூடு நாம் கண்டடையும் சில நல்ல கூறுகளை இது குறிப்பதாக நினைக்கிறேன்.//
இதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. பண்பாடு குறித்து உங்களது நீண்ட உரையாடலும் அதன் நடைமுறைச் சார்ந்த கூறுகளை விளக்கமாக சான்றுகளுடன் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. பண்பாட்டின் இரண்டு கூறுகளை நீங்களே கீழ்கண்டவாறு விளக்கியள்ளீர்கள்.
//பண்பாடு ஒரு மனிதக்கூட்டத்தின் பண்புகளின் தொகுப்போ என்று எண்ணுகிறேன்.
அறக்கோட்பாடுகள், மதக்கோட்பாடுகளின் வழி வலியுறுத்தப்படும் கருத்துக்கள் அப்படியானவை அல்ல.
அது இலட்சியம் ஒன்றை நோக்கியதாக இருப்பதோடு, ஒரு மனிதக்கூட்டம் "இப்படி இருக்கவேண்டும்' என்று வலியுறுத்துவது.
பண்பாடு ஒரு மனிதக்கூட்டம் எப்படி இருக்கிறது என்பது. அற வலியுறுத்தல் எப்படி இருக்க வேண்டும் என்பது.//
பண்பாட்டில் உள்ள வழக்குகள் என்பது அதன் முதல்கூறு. பண்புகளின் பொதுமை. அதாவது ஆங்கிலத்தில் customs and manners என்போமே அதைப் போன்றது. இவைகளும்கூட காலங்காலமாக ஒன்றே போல் வந்ததல்ல. ஒவ்வொரு சமூகம் இதனை தனது மதிப்படையில் தீர்மாணிக்கிறது. உயர் மதிப்பு கொண்டவற்றை நாம் வழக்ககுகளாக பண்புகளின் பொதுமைகளாக அதாவது பண்பாடு என்பதாக நடைமுறையில் கைக்கொள்கிறோம். சான்றாக விருந்தொம்பல் என்பதை வள்ளுவர் வலியுறுத்தும்போது அதற்கு புறனடையாக வேறொரு பழக்கம் இருந்திருக்கலாம் அல்லது இப்பழக்கத்தை உயர் மதிப்புள்ளதாக மாற்றுவதன் மூலம் சமூகம் இதனை பின்பற்றச் செய்யலாம் என்பதே வள்ளுவரிடமிருந்து நாம் பெறுவது. பண்பற்ற நிலையில் இப்பண்பு வலியுறத்தப்படவேண்டியது அவசியமே. இதனை தமிழர் பண்பாட்டுடன் மட்டுமே சுருக்க வேண்டியதில்லை. எல்லா பண்பாடுகளிலும் அல்லது இனங்களிடமும் இப்பண்பு இருப்பது வரவேற்கப்பட வேண்டியதே. இதற்கு பல சமூக காரணங்கள் உண்டு அதற்குள் நாம் போக வேண்டாம்.
இங்கு பண்பாட்டின் அறக்கூற்றையே நான் முதன்மைப்படுத்தி பேசுகிறேன். பண்பாடு என ஒரு இனத்தின் அடையாளமாக முதன்மைப்படுத்தவது இக்கூறே. அதாவது இயற்கை Vs பண்பாடு என்பதை இருமை எதிர்வுகளாக கட்டமைத்து இயற்கையை பண்பாட்டின் மூலம் ஒழுங்கமைப்பதே அறவியலின் அடிப்படை. இயல்பானது என்பதை இயல்பற்றதாக கட்டமைப்பது பற்றியதே எனது கவனம். இதனை நீங்கள் சரியாக புரிந்தும் அங்கீகரித்துள்ளீர்கள். சொற்பயன்பாட்டில் உள்ள பிரச்சனைதான். அறம் சார்ந்த பண்பாட்டுக்கூறையே பண்பாடு என்கிற புரிதலுடன் எழுதப்பட்டுள்ளது எனது பதிவு. மற்றவற்றை வழக்குகளாக பாவிப்பதே சரி என நினைக்கிறேன். இது தனிப்பட்ட சொல் அற்ற நிலையில் உருவாகும் சின்ன குழப்பமே. பண்பாடு குறித்த உங்களது நீண்ட பின்னோட்டம் இப்பிரச்சனைகளைப்பற்றி பேசும்போது இதனையும் கவனத்தில் எடுத்து சிந்திப்பதற்கு தள்ளியுள்ளது. உரையாடலுக்கு நன்றி.
அன்புடன்
ஜமாலன்.
Post a Comment