குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் – பகுதி்:1.
குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் –பகுதி:2
பண்டைய மதமான வேதமதத்தின் ருக்வேதத்தில் ஸோமா என்ற தலைப்பின் கீழ் (ருக்வேதம் 8.48.3, 8.7.29, 8.64.10-11) ஸோமா (Soma) என்று ஒரு பானம் பற்றிப் பேசப்படுகிறது. பார்சிய ஜெராஷ்டிரிய மதத்தின் புனிதமறையான அவஸ்த்தாவில் இதையே ஹவ்மாHaoma) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸோமபானம் மதச்சடங்குடன் இணைத்தே பேசப்படுகிறது. சதபதபிரமாணம் (Satapatha BrahmaNam: VI.1.3.10) ஸோமபானம் பற்றி கூறும்போது உண்மை (சத்யம்), நற்பண்பு (ஸ்ரீ), ஒளி (ஜோதி) ஆகியவற்றைத் தரக்கூடிய தெய்வீக அம்சம் பொருந்தியதாக வர்ணிக்கிறது. இதன் எதிர்மறையாக சுராபானம் என்பது பொய் (அனுருதம்), துன்பம் (பாபமா), அறியாமை (தாமா) கொண்டதாகவும் அது மனிதர்களுக்கானதாகவும் இருந்து வந்துள்ளது. ஸோமபானம் ஞானத்தையும், ஆனந்தத்தையும் தருவதாக சொல்லப்பட்டது. ஸோம யாகத்தில் இந்திரன், அக்னி உள்ளிட்ட தேவர்கள் குடிப்பதற்காக இது அளிக்கப்பட்டுள்ளது. சுராபானம் கீழ்தட்டு மக்களுக்கானதாக ஒதுக்கிவைக்கப்பட்டது. “புவியின் மனிதக் கடவுளான பார்ப்பனர்கள் அதை அருந்துவது தடைசெய்யப்பட்டுள்ளது“ (9). அதை அருந்துவது பாவமாக தர்மசாத்திரங்களால் அறிவிக்கப் பட்டது.
வேதக்கடவுளான ஸோமா, சந்திர வழிபாட்டுடன் உறவு கொண்டதாகும். இச்சந்திர வழிபாடு
என்பது யூதமத வழிப்பாட்டுடன உறவுடையதாக சமர் அப்பாஸ் என்கிற ஆய்வாளர் தெரிவிக்கிறார் (10). ஆரிய - பிராமண மதமும் யூத மதமும் ஒரே மூலத்தைக் கொண்டதாக விளக்கும் இவரது கருத்து, பண்டைய யூதர்களின் மதுவுடன் இந்த ஸோமாவிற்கு ஒரு பூர்விகத் தொடர்பிருப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது. ஸோமா-க் கடவுளுக்கு 27 நட்சத்திரங்கள் மனைவிகளாக இருப்பதாகவும், இவை எல்லாம் இரவுடன் உறவு கொண்டதான ஒரு ஒப்புமையை தருவதாகவும் உள்ளது. சமஸ்கிருதத்தில் திங்கள் கிழமையை ஸோமவார் என்று அழைப்பதும் இந்த சந்திர வழிப்பாட்டுடன் அறியப்படும் ஸோமாவுடன் உறவுகொண்டதே. ஸோமா என்பதற்கு சமஸ்கிருதத்தில் சந்திரன் அதாவது திங்கள் என்றே பொருள். சூரியன் x சந்திரன், வெம்மை x குளிர்ச்சி, அக்னி x நீர் என்பதான எதிர்வுகள் இதன் உள்ளடக்கப்பட்ட அமைப்பியல் விதிகளாக செயல்பட்டிருப்பதை அனுமானிக்கலாம். தொன்மம் என்பது பண்டைய சமூகங்களில் மனிதன் இயற்கையுடன் தன்னை உறவுபடுத்திக்கொள்ள உருவாக்கிக்கொண்ட ஒரு கதையாடலே. இக் கதையாடல்கள்வழி இயற்கையை தன்வயப்படுத்த முனையும் மனிதன், இயற்கையுடன் ஆன ஒருவித உறவை ஏற்படுத்திக்கொள்ள முனைகிறான். ஸோமா என்பதுடன் உறவு கொண்டதாக ஆனந்தம் மற்றும் சந்திரன் அதன் ஆதிக்கத்திற்கு உட்பட்ட இரவு ஆகியவற்றையும் கவனத்தில் கொண்டால், மதுவுடன் இணைந்து ஒரு பேரின்பம் என்பதன் உள்ளார்ந்துள்ள இரவு பற்றிய நினைவு முக்கியமானது.
பார்சிய மதமான ஜொராஷ்டீரியத்தில் அகுரமஸ்தா என்கிற அவர்களது இறைவனுக்கு ஹவ்மா என்கிற இந்த மது படைக்கப்பட்டுள்ளது. இம்மது ருக்வேதத்தில் சொல்லப்பட்ட ஸோமாவின் அத்தனை நற்பண்புகளையும் கொண்டதாக வர்ணிக்கப்பட்டுள்ளது. ஸோமபானம் என்பது நீர், தேன், ஆல்கஹால், புற்கள், ஒருவகை காளான் மற்றும் மலைகளில் வளரும் செடிவகைகளிலிருந்து உருவாக்கப்பட்டது. ஸோமா என்பது ஒருவகை தாவரம் என்றும் அது காஷ்மீரி்ல் அதிகம் விளைந்து வந்தாலும் காஷ்மீர் என்பது வேதகால பிராமணர்களின் ஒரு முக்கிய வாழிடமாக இருந்து வந்ததற்கு ஒரு காரணமாக அமைந்ததை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இது ஒருவகை காளான் என்றும் அக்காளான் பண்டைய சைபீரியாவில் மாந்ரீகச் சடங்கில் பயன்பட்டதாகவும் ஆர். கோர்டன் வாஷன் என்கிற ஆய்வாளர் கூறுகிறார் (11).
ஆக, மதுவிலும் இந்த இறை-மனித வேறுபாடு், முன்வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அதாவது வேதகால மதுவில் தெய்வாம்சம் பொருந்தியவர்களுக்கு ஸோமபானம், சாதாரண மக்களுக்கு சுராபானம் என்கிற பிரிவு சுவர்க்கத்தில் அளிக்கப்படும் மது பேரின்பத்தையும், உயர் ஞானத்தையும் தரும் தெய்வாம்சம் பொருந்தியதாகவும், மனிதர்களுக்கான மது பாவமானதாகவும் கருதப்படும் ஒரு புனைவு நீட்சியாக இருப்பதை அனுமானிக்கலாம்.
சங்ககாலத்தில் யவனர்கள் எனப்படும் கிரேக்க மற்றும் ரோமானியர்களிடமிருந்து தமிழகத்திற்கு மது இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதைப் பார்க்கிறோம். புறநானூறு விவரிக்கும் ஒரு காட்சி "யவனர் நல்ல குப்பிகளில் கொணர்ந்து தந்த நறுமணம் கமழும் குளிர்ந்த மதுவைப் பொன் வளையல்களை அணிந்த இளம் பெண்கள் பூவேலை செய்யப்பட்ட பொற்கின்னங்களில் ஊட்டுவிக்கின்றனர்" (புறநானூறு - 56) (12). யவனர்கள் இரட்டைப்பிடிக்கொண்ட ஒருவகை மதுச்சாடிகளில் (Amphorae) உயர்வகைத் 'தன்கமழ் தேறல்'களைக் கொண்டுவந்து தமிழகத்தில் இறக்கினர். அவற்றுக்கீடாகத் தமிழகத்து மிளகு, இலவங்கம், கலிங்கம் முதலியவற்றை ஏற்றிக்கொண்டு சென்றனர். அத்தகைய இரட்டைப்பிடி மதுச்சாடிகளின் சிதைவுகளும், கண்ணாடியாலான மதுக்கிண்ணங்களும் அரிக்கமேட்டில் கிடைத்துள்ளன (13) என்கிறார் தமிழாய்வு அறிஞரான கே.கே. பிள்ளை அவர்கள்.
'கள்ளுண்ணும் வழக்கம் பழந்தமிழகத்தில் மிகவும் விரிவாகக் காணப்பட்டுள்ளது. மன்னர், பாணர், புலவர், கூத்தர், பொருநர், விறலியர் அனைவருமே மதுவுண்டு களித்தனர். இயற்கையாகக் கிடைத்த பனங்கள், தென்னங்கள், ஈச்சங்கள் ஆகியவற்றையும், அரிசி, புளித்த சோற்றுக்காடி முதலியவற்றையும் காய்ச்சி இறக்கிய மதுவையும், யவனர்கள் கப்பலில் கொண்டவந்த தேறலையும் அவர்கள் விருப்பத்துடன் குடித்தனர்'. (புறநானூறு 56: மலைபடுகடாம் 522). தேறலின் சுவையையும் , அது கொடுக்கும் வெறியையும் தூண்டுவதற்காக மது வகைகளைக் கண்ணாடி குப்பிகளிலும், மூங்கிற் குழாய்களிலும் நிரப்பி, நெடுநாள் மண்ணில் புதைத்து வைப்பர். (புறம். 392. அகம். 348) அத்தகைய மது வகைகளின் வெறி மிகவும் கடுமையாக இருக்கும். அக் கடுமையைப் பாம்பின் கடிக்கும், தேள் கொட்டுக்கும் (சிறுபாணாற்றுப்படை 237) புலவர்கள் ஒப்பிட்டுள்ளனர். கள்ளுக்கு இன்சுவையும், நறுமணமும் ஊட்டுவதுண்டு. (பொருநராற்று்ப்படை 157). (14) பெண்கள 'காமபானம்' என்ற தனிப்பட்ட மது ஒன்றை அருந்தினர்.(15) சங்ககாலத்தின் இறுதியில் தமிழக மக்களிடையே குடிப்பழக்கம் அளவுக்கு மீறிக் காணப்பட்டது. (16) பெண்கள் நாளங்காடிகளில் கள் விற்பனை செய்துள்ளனர். (17) கரும்பும், அவலும், மான் ஊனுக்கும், கள்ளுக்கும் பண்டமாற்றாக பயன்படுத்தப்பட்டுள்ளது. (பெரும்பாணாற்றுப்படை 161-5) (18). ஈழம் பூட்சி என்கிற கள் இறக்குவதற்கான வரி வசூலிக்கப்பட்டுள்ளது. (19) சங்ககாலத்திற்கு பிந்தைய களப்பிரர் காலத்தில் செழித்தோங்கிய புத்தம் மற்றும் சமணம் ஆகியவற்றால் தமிழகத்தில் கள் அல்லது மது குடித்தல் தீமையாகவும் ஒழுக்கக்கேடாகவும் வலியுறுத்தப்பட்டது. அறம் சார்ந்த இலக்கியங்களான பதினென்கீழ்க்கணக்கு நூல்களும், ஐம்பெருங்காப்பியங்களும் உருவான ஒரு காலம் ஆகும். இச் சூழலில்தான் வள்ளுவர் 'கள்ளுண்ணாமை" என்கிற அதிகாரத்தில் 10 குறட்களை கள்குடிக்கு எதிராக எழுதி உள்ளார்.
பொதுவாக கள்குடி மற்றும் மது அருந்துதலில் புத்தம், சமணம் இரண்டும் அறம் சார்ந்த நிலையைவிட உடல் மற்றும் மனநலம் சார்ந்த நிலையையே எடுக்கின்றன. குறிப்பாக புத்தரால் துறவிகளுக்கு முன்வைக்கப்பட்ட பஞசசீலக் கொள்கையில் ஐந்தாவது கொள்கை குடியை தீமையாக முன்வைக்கிறது. குறிப்பாக மனம் ஒருமை அடைந்து நிர்வான (நிப்பான) நிலையை அடைவதற்கும் எதிரானதாகப் பார்க்கிறது. சமூக அந்தஸ்த்து சிதைந்து பிக்குகள் மயங்கி கிடக்கும் நிலையை உருவாக்குவதாலும், பேச்சில் முறையற்ற வெளிப்பாட்டை உருவாக்குவதும் குறிப்பாக மனம் கட்டுப்பாடற்றதாக மாறிவிடுவதாலும் புத்தர் பிக்குகளுக்கு குடியை தடையாக அறிவித்தார். சுக்லோவதா சுத்தா (Sigalovada Sutta) வில் குடியின் தீமைகளாக 6 முக்கிய கருத்துக்களை ஆரியன் ஒருவனின் மகனான சிக்லோவதா என்பவனுக்கு புத்தர் போதிக்கிறார் (20). இறுதியில் அந்த ஆரியன் புத்த பிக்குவாக மாறுகிறான்.
புத்தர் இரண்டு கடைக்கோடி நிலைகளுக்கும் போகாமல் நடுவழி என்கிற மத்திய மார்க்கத்தை போதித்தவர் என்பதால் குடியில் குடியாமை மற்றும் மிகைக் குடிக்கு நடுவில் ஒரு மத்திய வழியாக மிதமானக் குடியை ஏற்கலாம் என்பதான வாதங்கள் முன்வைக்கப் படுகின்றன. இந்த அடிப்படையில் தைவான், இலங்கை போன்ற நாடுகளில்கூட புத்தமதத்தை சேர்ந்தவர்களில் ஒரு சிலர் மது அருந்தும் பழக்கத்தை கடைபிடிக்கிறார்கள். சுருக்கமாக 'ஒரு சாலையைக் கடக்கும்முன் இருபுறமும் பார்' என்பதுதான் புத்தத்தின் நடுவழிப்பாதை எனலாம். நன்மை, தீமை துவங்கி எல்லா எதிர்வுகளிலும் இருக்கடைக்கோடியில் ஒரு முனையைச் சாராமல் எது அமைதியை, ஊடுறுவிச் செல்வதை, அறிவொளியைத், விடுதலையைத் தரக்கூடியதோ அந்த பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கண்மூடித்தனமான நம்பிக்கைகளைவிட்டு தேர்வுகள அறிவார்ந்த தளத்தில் செய்யும் படி சொல்கிறது புத்தம் (21). இதில் தனிமனித தேர்விற்கான முக்கியத்துவம் வலியுறுத்தப்படுவதைக் காணலாம்.
புத்தர் தனது போதனைகளை இரண்டு தளங்களில் நடத்திவந்தார். 1. பிக்குகளின் நடைமுறைகள் சார்ந்த நடவடிக்கைகள் பற்றியவை 2. சாதாரண மனிதர்களின் நடைமுறைகள் சார்ந்த நடவடிக்கைககள். பஞ்சசீலக் கொள்கை என்பது பிக்குகளுக்காக போதிக்கப்பட்டது என்பதால் குடியை முழுமையான தீமையாக போதிக்கிறது (22). குடி ஒரு தீமைக்கான வழிமுறையாக பாமரர்களக்கு சுக்லொவ்தா சுத்தாவில் விளக்கப்படுகிறதே ஒழிய அதை தடைசெய்வதைப்பற்றி பேசவில்லை என்பது கவனிக்கத்தக்கது. தவிரவும் புத்தர் தனது பிரதான நோக்கமாக முன்வைத்த சமூக மாற்றத்தில் அன்றைய சமூகம் குடியில் மூழ்கி கிடந்த நிலையில் அதனை கடுமையாக எதிர்ப்பது அவரது கொள்கை அடிப்படையாக மாறியதுடன், தனது மார்க்கத்தை அன்றைய பழங்குடி மற்றும் பிரதான மதமாக விளங்கிய ஆரியமதத்திலிருந்து வித்தியாசப்படுத்த குடியை எதிர்ப்பதும் அவசியமாகியது.
குடிகுறிதது விவாதிக்கும் ஒரு புத்த ஜாதகக்கதையில் புத்த வழிப்பாட்டைக் கொண்ட வைசாகா என்ற பெண் 500 பெண்கள் நடத்தும் ஒரு குடி-விழாவிற்கு (drinking festival) புத்தரை அழைக்கிறாள். அவ்விழாவில் பெண்கள் குடித்து புத்தரின் முன் ஆடிப்பாடியும், தன்னை மறந்த நிலையி்ல் குடித்து கூத்தாடுகிறார்கள். புத்தரின் மடத்திற்கு வந்தபிறகும் தான் எங்கிருக்கிறோம் என்பது அறியாமல் ஒருவரை ஒருவர் சண்டையிட்டும் ஆடிப்பாடியும் களிக்கிறார்கள். இந்த சூழலில் புத்தரிடம் குடி பற்றி கேட்கிறாள் வைசாகா. புத்தர் அதற்கு ஆல்கஹால் இயற்கையில் தோன்றிய முறைப்பற்றிய கதை ஒன்றை சொல்வதாகச் செல்கிறது அக்கதை(5). இதில் முக்கிய விடயம் என்னவென்றால், பெண்கள் 500 பேர்கொண்ட ஒரு குழு குடியை விழாவாக கொண்டாடும் ஒரு வழக்கம் இருந்தது என்பதே. அதிலும் பெண்களின் இந்த மெய்மறந்த நிலை என்பது புத்தரின் குடி பற்றிய முடிவிற்கு ஒரு காரணமாக இருந்துள்ளதை உணரமுடியும். புத்த ஜாதகக்கதைகள் புனைவா? நடந்தவையா? என்கிற விவாதத்தைவிட கதையில் நடந்த பெண்களின் இந்த கட்டற்ற களிப்பு ஒரு சமூக சீர்திருத்தவாதியின், ஒரு புதிய வழிமுறையை உருவாக்கிய ஒருவரின் நடைமுறை நிலைப்பாட்டில் ஏற்படுத்திய மாற்றமே முக்கியம். அடிப்படையில் புத்தம் மனதின் விழிப்புநிலை பற்றி பேசுவதால், குடி என்பது மனஒருமைப்பாட்டை சிதைப்பது என்றவகையில் எதிர்ப்பது அதன் அடிப்படை போதனைகளில் ஒன்றாகியதை வரலாற்று அடிப்படையில் புரிந்துகொள்ள வேண்டி உள்ளது.
இவ்வுலகவாழ்வில் (இம்மையில்) மது என்பதை விலக்கப்பட்டதாக (ஹராமாக) சொல்லும் இஸ்லாமிய புனித மறையான குரான் உயர்ந்த வகையிலான மயக்கமற்ற, தலைவலிவராத மது சுவர்க்கத்தில் சிறுவர்களுக்கும்கூட அளிக்கப்படும் என்றும் வர்ணிக்கிறது. (குரான்-76:15-19, 43:71-72, 76:5-6, 83:25-28, 56:17-19 மற்றும் 37:45,47). குரான் முன்வைக்கும் பானங்களில் கற்பூரம் கலந்தது மற்றும் இஞ்சி கலந்ததும் என இரண்டுவகையான பானம் பேசப்படுகிறது. இஞ்சி கலந்த அந்த பானத்தை ஸன்ஜபில் (Zanjabil) என்றும் கஸ்தூரி மற்றும் கற்பூரம் கலந்த முத்திரையிடப்பட்ட கஃபூர் (Kafur) மற்றொரு பானவகையாகவும் சொல்லப்படுகிறது. (23) இப்பானங்கள் சுவர்க்கத்தில் உள்ள தஸ்லிம் மற்றும் ஸல்ஸபில் எனும் ஊற்றிலிருந்து சுவர்க்கவாசிகளுக்கு வழங்கப்படும் என்கிறது. இதில் இஞ்சி (அரபியில் ஸன்ஜபில் என்பது இஞ்சியைக் குறிப்பதற்கான சொல்லாகும்.) என்பது கீழ்திசை நாடுகளின் மருத்துவத்தில் ஒரு முக்கியமான பொருளாகும். குரானில் இந்தவகைப் பானங்கள் சுவர்க்க வாசிகளுக்கானவையாக முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் தர்க்கரீதியான நீட்சி இப்பானங்கள் இன்பத்தின் அடையாளமாக குறியிடப்பட்டுள்ளது என்பதே. இல்வாழ்வில் மதம் முன்வைக்கும் வாழ்வை வாழ்பவனுக்கு சுவர்க்கத்தில் தரப்படும் இன்பம் இந்த பானங்களே. ஆனால், இன்றைய யதார்த்த வாழ்வில் இந்தவகை பானங்கள் பாவமாக சொல்லப்பட்டுள்ளன. இந்த பாவம் இம்மத இறையியலின் மனித தோற்றத்துடன் தொடர்ந்துவரும் ஒன்று. அடிப்படையில் மனிதவாழ்வே பாவத்தின் விளைவு, இறைவனின் சாபத்தின் விளைவு என்கின்றன இம் மதங்கள்.
புராதன சமூகங்களின் மதம் மற்றும் வழிப்பாட்டில் குடிபானங்கள் ஒரு முக்கியப் பொருளாக இருந்து வந்துள்ளது. இன்றும் கூட கிறித்துவத்தில் திராட்சைரசம் அதாவது ஒயினும், தமிழக நாட்டார் வழிப்பாட்டில் கள், சாராயம் போன்றவையும் வழிப்பாட்டிற்குரிய பொருளாக இருந்து வருகிறது. குடிக்கலாச்சாரம் பல பண்பாடுகளிலும் காணப்படுவதையும், கற்காலம் தொடங்கி இன்றைய நவீன காலம் வரை குடியின் வரலாற்றையும் டேவிட். ஜே. ஹான்சன் (David J. Hanson, Ph.D.) என்கிற ஆய்வாளர் தனது History of Alcohol and Drinking Around the World (HADW) என்கிற கட்டுரையில் விரிவாக விவாதிக்கிறார். (அதன் தொகுப்பை பிற்சேர்க்கையில் காண்க.)
------------------------
அடிக்குறிப்புகள்.
9. Studies in Kautilya, by M.V. Krishana Rao, Delhi-1979, quoted from Encylopedia of Hinduism by Nagendra Kumar Singh.
10. Hebrews And Vedic Brahmins -Dr. Samar Abbas, Aligarh, India. http://www.vnn.org/editorials/ET0307/ET14-8222.html.
11. Wasson, Robert Gordon (1968). "Soma: Divine Mushroom of Immortality". Ethno-Mycological Studies.
12. டாக்டர் கே.கே. பிள்ளை - தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் (மறுபதிப்பு 2007) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - பக்.60.
13. மேற்படி நூல் - பக். 84
14. மேற்படி நூல் - பக். 144. சுட்டப்பட்ட அனைத்து சங்க இலக்கியக் குறிப்புகளும் இந்நூலில் குறிப்பிடப்பட்டவையே.
15. மேற்படி நூல் - பக். 355
16. மேற்படி நூல் - பக். 144
17. மேற்படி நூல் - பக். 152
18. மேற்படி நூல் - பக். 153
19. மேற்படி நூல் - பக். 315
20. Sigalovada Sutta - The Discourse to Sigala - The Layperson's Code of Discipline Translated from the Pali by Narada Thera (http://www.accesstoinsight.org/tipitaka/dn/dn.31.0.nara.html)
21.Fundamentals of Buddhism Four Lectures by Nyanatiloka Mahåthera - The Wheel Publication No. 394/396
22. The Bhikkhus' Rules - A Guide for Laypeople - The Theravadin Buddhist Monk's Rules compiled and explained by Bhikkhu Ariyesako (http://www.accesstoinsight.org/lib/authors/ariyesako/layguide.html )
23. சோழர்காலத் தமிழர்கள் பழச்சாற்றில் இஞ்சியை ஊறவைத்து குடித்துள்ளனர் (கே.கே. பிள்ளை-பக். 348). கற்பூரத்தை வெற்றிலையுடன் மெல்லம் பழக்கமும் இருந்துள்ளது (பக்.355)
பின் குறிப்பு:
நண்பர்களுக்கு.. இந்த தொடரை துவங்கியவுடன், குடிக்கலாச்சாரம் பற்றிய தொகுப்பு நூலை வெளியிடும் புலம் பதிப்பகத்தின் நண்பர் லோகநாதன் அவர்கள், இந்நூல் அச்சுப்பணிகள் முடிந்துவிட்டதால் ஓரிரு வாரங்களில் வெளிவருகிறது என்றும், எனக்கு நண்பர் மூலம் தகவல் வந்திருக்கும் என்று எண்ணியருந்ததாகவும் அஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். நூல் வெளிவருவதால், அடுத்த பகுதிகள் நூல் வெளிவந்தபின் வெளியிடலாம் என்று தற்காலிகமாக நிறத்தப்படுகிறது. இதற்கு பின்னோட்டம் இட்ட ஆர்வம் உள்ள நண்பர்கள் மற்றும் மெளனமாக வாசித்த நண்பர்களுக்கும் இங்கு நூல் குறித்த குறிப்புகளை வெளியிடுகிறேன். இத்தொகுப்பு நூலில் மற்றும் சில நண்பர்கள், தமிழக அறிவுஜீவிகளால் எழுதப்பட்ட கட்டுரைகள் வெளிவருகிறது என்பதையம் தெரிவித்துக் கொள்கிறேன்.
புத்தகத்தின் தலைப்பு : 'குடி'யின்றி அமையா உலகு
தொகுப்பாசிரியர்: முத்தையா வெள்ளையன்
வெளியீடு: புலம்
332/216, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
திருவல்லிக்கேணி,
சென்னை 600 005
கைபேசி: 097898 64555.
- ஜமாலன் (ஆகஸ்ட் 24 2009)






